சொராபுதீன் என்கவுன்ட்டர் பின்னணியில் போலீஸாரின் சதி: நீதிமன்றத்தில் சகோதரர் வாதம்

சொராபுதீன் என்கவுன்ட்டர் சம்பவத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீஸ் உயரதிகாரிகளின் சதித் திட்டம் இருப்பதாக அவரது சகோதரர் மும்பை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

சொராபுதீன் என்கவுன்ட்டர் சம்பவத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீஸ் உயரதிகாரிகளின் சதித் திட்டம் இருப்பதாக அவரது சகோதரர் மும்பை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆமதாபாதில் அனைத்து அதிகாரிகளும் கூடி ஆலோசித்ததாகவும் அவர் வாதிட்டார்.
குஜராத் மாநிலத்தில் சொராபுதீன், அவரது மனைவி கெளசர் பாய், அவர்களின் கூட்டாளிகள் துளசிதாஸ் பிரஜாபதி ஆகியோர் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும், லஷ்கர் அமைப்பின் பயங்கரவாதிகள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொராபுதீன் உள்ளிட்டோர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும், அந்தச் சம்பவத்தில், காவல் துறை உயரதிகாரிகள், அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோருக்குத் தொடர்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமித்ஷா உள்ளிட்ட சிலரை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சிபிஐ முடிவு செய்தது. இந்நிலையில், சிபிஐ அமைப்பின் முடிவுக்கு எதிராக மும்பை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் பொது நல மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். இது ஒருபுறமிருக்க, வழக்கில் இருந்து போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என்.தினேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சொராபுதீனின் சகோதரர் ரூபாபுதீன் ஷேக் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேபோன்று வேறு சில காவலர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள், நீதிபதி ரேவதி மொஹிதி தேரே முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபாபுதீன் ஷேக் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கெளதம் திவாரி வாதிட்டதாவது:
சொராபுதீனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸ் உயரதிகாரிகள் சதித் திட்டம் தீட்டினர். இதுதொடர்பாக ஆலோசிக்க ராஜஸ்தான் அதிகாரிகள் ஆமதாபாத்துக்கு வந்தனர். ஆனால், இந்தக் கூற்றை போலீஸார் திட்டவட்டமாக மறுக்கின்றனர். ஆமதாபாத்துக்கு காவல் துறை பயிற்சிகளில் பங்கேற்கவே அவர்கள் வந்ததாகக் கூறுகின்றனர். அந்த நேரத்தில் எந்தவிதமான பயிற்சி வகுப்புகளும் அங்கு நடைபெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்தே போலீஸ் உயரதிகாரிகளின் சதி நடவடிக்கைகள் ஊர்ஜிதமாகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com