மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் தற்கொலை முயற்சிகளை தடுக்க நடவடிக்கை: சிவசேனை விமர்சனம்

மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்க பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அதனை சிவசேனை விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்க பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அதனை சிவசேனை விமர்சித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை, 'வயிற்று வலிக்கு காலுக்கு சிகிச்சை அளிப்பதை போன்றது' என்று அக்கட்சி கிண்டலாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வருவோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. பாட்டீல் (84) என்ற விவசாயி, தலைமைச் செயலக வளாகத்தில் கடந்த 22-ஆம் தேதி விஷம் குடித்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், மேலும் 2 பேர் அந்த கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர். மற்றொருவர் தீக்குளிக்க முயன்றார். இதுபோன்ற தற்கொலை முயற்சிகளைத் தடுப்பதற்காக, தலைமைச் செயலக வளாகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் இந்த நடவடிக்கைகளை சிவசேனை விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் புதன்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைமைச் செயலகத்தில் வலைகள் பொருத்துவது, தற்கொலைச் சம்வபங்களுக்கு தீர்வாகி விடுமா? மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தங்களது வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் சுமார் 4,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்கள், மகாராஷ்டிர மாநிலத்தின் மீது கறையாக படிந்துள்ளது.
விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், தற்கொலை முடிவை தேட வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்காது. அதனை விடுத்து, தலைமைச் செயலகத்தில் வலையை பொருத்துவது, வயிற்று வலிக்கு காலுக்கு சிகிச்சை அளிப்பதை போன்றது என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனை அங்கம் வகிக்கிறது. எனினும், பல்வேறு விவகாரங்களில் பாஜகவை சிவசேனை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com