ராகுல் தலைமையில் ஆட்சி அல்லது மோடி இல்லாத பாஜக ஆட்சி! : காங்கிரஸின் 60 தொகுதி வியூகம்

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கடந்த முறையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது
ராகுல் தலைமையில் ஆட்சி அல்லது மோடி இல்லாத பாஜக ஆட்சி! : காங்கிரஸின் 60 தொகுதி வியூகம்

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கடந்த முறையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியைத் தக்க வைத்தபோதிலும் அக்கட்சிக்கு பேரவைத் தேர்தலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்த காங்கிரஸால் முடிந்தது. 
அதைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி பெற்ற வெற்றியும் காங்கிரஸுக்கு உத்வேகத்தை அளித்துள்ளன. 'பிரதமராக நரேந்திர மோடியின் நாட்கள் எண்ணப்படுகின்றன' என்ற நம்பிக்கையும் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றாலும் கூட மோடி இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவிக்கு வர வாய்ப்பில்லை என்று அக்கட்சி கணித்துள்ளது.
இது எப்படி சாத்தியம்? காங்கிரஸ் கட்சி போடும் கணக்குதான் என்ன? 
கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 552 இடங்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதில் பாஜக மட்டும் தனியாக வென்ற இடங்கள் 282. இது தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 என்ற மேஜிக் நம்பரை விட 10 இடங்கள் அதிகமாகும். ஆனாலும்கூட, தனியாகவே ஆட்சியமைக்கும் பலம் இருந்தபோதிலும் சிவசேனை, தெலுங்கு தேசம் போன்ற தனது கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பாஜக அரசை அமைத்தது.
2014 தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதான மக்களின் கடும் அதிருப்தி காரணமாகவே பாஜகவுக்கு 282 இடங்கள் என்ற அதிகபட்ச வெற்றி கிடைத்தது. ஒரு புதிய அரசு அமைய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு ஏக்கமாக மாறியதன் விளைவே இந்த வெற்றி எனலாம். வாஜ்பாய் காலத்தில் கூட பாஜகவால் இவ்வளவு பெரிய வெற்றியை எட்ட முடியவில்லை. 1999 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்ற 182 இடங்கள்தான் அதுவரையில் அந்தக் கட்சியால் சாதிக்க முடிந்த பெரிய வெற்றியாகும்.
கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில் இருந்த சூழல் தற்போது நாட்டில் இல்லை. காங்கிரஸ் மீதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீதும் அப்போது நிலவிய கடுமையான அதிருப்தியும் தற்போது இல்லை. மேலும்,
பாஜக ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும் அந்த அரசுகளுக்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் திடமாக நம்புகின்றனர். 
இந்த மாநிலங்களில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியது. இவற்றில் சில மாநிலங்களில் காங்கிரஸால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அக்கட்சிக்கு கடும் சவாலை ஏற்படுத்தியதில் காங்கிரஸாருக்கு புது உத்வேகம் ஏற்பட்டுள்ளது. மோடி வெல்லவே முடியாத தலைவர் அல்ல என்பதையும் அத்தேர்தல் உணர்த்தியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் கருத்து கூறுகையில் 'அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு இரண்டாவது முறையாகப் பிரதமராகும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது. அடுத்த அரசை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைக்கும். அல்லது மோடி அல்லாத மற்றொரு தலைவரின் தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். மிக மோசமான நிலைமையிலும் கூட, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தற்போதைய இடங்களைவிட குறைந்தது 60 முதல் 80 இடங்கள் நிச்சயமாகக் கூடுதலாகக் கிடைக்கும்' என்றார்.
அதாவது, காங்கிரஸுக்குக் கிடைக்க வாய்ப்புள்ள இந்த 60 முதல் 80 இடங்கள் பாஜகவுக்குக் குறையும் என்பதே காங்கிரஸாரின் கணக்கு. அப்படி நடந்தால் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு பாஜக 210 முதல் 220 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றால் பெரும்பான்மை பலத்துக்குத் தேவையான 272 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அக்கட்சி, மற்ற கட்சிகளின் தயவையே நாட வேண்டியிருக்கும். 
பாஜகவின் முக்கியமான கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், சிவசேனை, அகாலி தளம் ஆகியவை தற்போது அதிருப்தியில் உள்ளன. இந்தக் கட்சிகள் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணியில் தொடருமா என்பதே கூடக் கேள்விக்குறி. சிவசேனையைப் பொறுத்தவரை அடுத்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களில் குறைந்தபட்சம் 100 இடங்களை இழக்கும் என்பது சிவசேனையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரௌத்தின் கணிப்பு.
எனவே, பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அக்கட்சி தனது கூட்டணிக் கட்சிகளையோ, தனது கூட்டணியில் இடம்பெறாத திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி போன்ற கட்சிகளையோ சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மற்ற கட்சிகள் மோடியை நிச்சயம் பிரதமராக ஏற்காது என்பதே காங்கிரஸின் கணக்கு. 
அப்போது, மிதவாதத் தலைவராக அறியப்படும் ராஜ்நாத் சிங்கையோ, யார் கண்டது - அத்வானியையோ பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தால் ஆதரிக்கத் தயார் என்று இந்தக் கட்சிகள் நிபந்தனை விதிக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. 
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை ஏற்பதைத் தவிர பாஜகவுக்கும் வேறு வழி இருக்காது. ஏனெனில், இந்த நிபந்தனையை ஏற்காவிட்டால் மற்ற கட்சிகளை மதச்சார்பின்மை என்ற குடையின்கீழ் இணைத்து காங்கிரஸ் ஆட்சியமைத்து விடும். ராஜ்நாத் போன்ற ஒரு தலைவர் பிரதமரானால் அதில் காங்கிரஸுக்கு என்ன நன்மை?
இந்தக் கேள்வியைப் பொறுத்தவரை, மோடி-அமித் ஷா கூட்டணியைப் போல் அந்தத் தலைவர் தந்திரமான வழிகளை நாடமாட்டார் என்ற நம்பிக்கை காங்கிரஸுக்கு உள்ளது. அதாவது, கோவா போன்ற சில மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலமும் பெறாமல், தனிப்பெரும் கட்சியாகவும் வராமல் இருந்தபோதே இந்தக் கூட்டணி குறுக்கு வழிகளில் எம்எல்ஏக்களை இழுத்து தங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்தியது. இது காங்கிரஸை மிகவும் பாதித்தது. அதேபோல், பிரதமர் மோடி போகுமிடம் எல்லாம் 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று கூறி வருவதும் அக்கட்சியைக் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தக் காரணங்களால் மோடி அல்லாத ஒருவர் பாஜக சார்பில் பிரதமராவதுதான் காங்கிரஸுக்கு ஏற்புக்குரியதாக இருக்கும்.
அடுத்த சில மாதங்களில் கைரானா, கோரக்பூர், பூல்பூர், அனந்த்நாக், அராரியா உள்பட 7 மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ' இந்தத் தேர்தல் பாஜகவுக்கு மற்றொரு பரீட்சையாக இருக்கும். மோடி அரசின் மீதான அதிருப்தி இத்தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
பாஜக அஸ்ஸாம், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பலம்பெற்ற போதிலும், கர்நாடகம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அது வலுவிழந்துள்ளது என்பதே உண்மை. இந்த மாநிலங்களிலும், உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் அக்கட்சிக்கு கடந்த முறை கிடைத்த அளவிலான தொகுதிகள் அடுத்த மக்களவைத் தேர்தலில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே யதார்த்த நிலை.
அதேவேளையில், தேர்தல் நெருக்கத்தில் ஏதாவது அதிரடி அறிவிப்பைகளை வெளியிட்டு மக்களைக் கவர்ந்திழுக்க மோடி-அமித் ஷா கூட்டணி முனையும் என்பதையும் காங்கிரஸ் உணர்ந்தே இருக்கிறது. 'ராகுல் தலைமையில் ஆட்சி' அல்லது 'மோடி இல்லாத பாஜக ஆட்சி' என்ற தனது இலக்கை எட்ட தன் கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, கூட்டணியை பலமாக அமைப்பது போன்ற பெருமுயற்சிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் காங்கிரஸ் அறிந்துள்ளது. அக்கட்சி மிகவும் உஷாராக தனது வியூகங்களை வகுத்து வருகிறது. எனவே, அடுத்து வரும் மாதங்களில் அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com