வன இழப்பீடு நிதியச் சட்ட விதிகளில் தாமதம்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

வன இழப்பீடு நிதியச் சட்டத்தின் வரைவு விதிகளை உருவாக்குவதில் நிலவும் தாமதம், பழங்குடியினர் மற்றும் வன வாசிகளின் உரிமைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக

வன இழப்பீடு நிதியச் சட்டத்தின் வரைவு விதிகளை உருவாக்குவதில் நிலவும் தாமதம், பழங்குடியினர் மற்றும் வன வாசிகளின் உரிமைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கும் இருவேறு கடிதங்களை அவர் எழுதியுள்ளார்.
ஹர்ஷ வர்தனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016, ஜூலை மாதம் மாநிலங்களவையில் பேசிய அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவ், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, வன இழப்பீடு நிதியச் சட்டத்தின் விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார். இந்த விவகாரத்தில், வன உரிமைகள் சட்டம் 2006-இன்கீழ் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எனினும், வன இழப்பீடு நிதியச் சட்டத்தின் விதிகள் தற்போது வரை உருவாக்கப்படாமல் உள்ளன. இது, பழங்குடியினர் மற்றும் வன வாசிகளின் உரிமைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் கடந்த ஆண்டு ஜூலையில் கேள்வியெழுப்பியிருந்தேன். அந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'மாநிலங்களவையில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு நீங்கள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், இந்த விவகாரத்தில் உங்களது உத்தரவு பின்பற்றப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com