வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்குவதே குறிக்கோள்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

வல்லமை பொருந்திய வளம் மிக்க தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிர ரக்ஷா மகாயக்ஞம்' வழிபாட்டின் முன்னோட்ட நிகழ்வான 'ஜல் மிட்டி' ரத யாத்திரையை, இந்தியா கேட் பகுதியில் புதன்கிழமை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ராஷ்டிர ரக்ஷா மகாயக்ஞம்' வழிபாட்டின் முன்னோட்ட நிகழ்வான 'ஜல் மிட்டி' ரத யாத்திரையை, இந்தியா கேட் பகுதியில் புதன்கிழமை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

வல்லமை பொருந்திய வளம் மிக்க தேசமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கலாசாரச் செறிவையும், பண்பாட்டையும் உலக நாடுகள் அனைத்தும் வியந்து பாராட்டுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
உலக நன்மை மற்றும் ஒற்றுமைக்கான பிரம்மாண்ட யாகம் தில்லியில் மார்ச் 18 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 1,100 வேத விற்பனர்கள் கலந்துகொண்டு வேள்வியை நடத்துகின்றனர். நாடு முழுவதும் உள்ள முக்கியப் பகுதிகளில் இருந்து மண்ணும், நீரும் சேகரிக்கப்பட்டு, அவை யாகத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக, இந்தியா - சீனா பதற்றத்துக்கு காரணமாக விளங்கும் டோக்கா லாம் பகுதியிலும், பாகிஸ்தானை ஒட்டிய வாகா எல்லையிலும், காஷ்மீரின் பூஞ்ச் எல்லையிலும் மண்ணும், நீரும் சேகரிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், அவற்றைச் சேகரிப்பதற்கான ரத யாத்திரை தில்லி இந்தியா கேட் பகுதியில் இருந்து புதன்கிழமை புறப்பட்டது. அதனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாதவது:
இந்திய தேசம் கலாசாரத் தொன்மையும், பண்பாட்டுப் பெருமையும் ஒருசேர நிறைந்தது. உலகமே ஒரே குடும்பம் என்ற தத்துவார்த்த சிந்தனைகள் இங்கிருந்தே தோன்றின. அந்த உண்மையை அறிந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் அனைவரும் நமது நாட்டின் பாரம்பரியத்தைப் போற்றி வருகின்றனர். அத்தகைய சிறப்பு மிக்க பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பது அவசியம். தில்லியில் மகா வேள்வி நடத்தப்படுவது இந்தியாவின் நலனுக்காக மட்டுமல்ல. உலகளாவிய நன்மைக்காகவும்தான்.
வளமும், செழுமையும் நிறைந்த வல்லமை பொருந்திய நாடாக இந்தியா திகழவேண்டும் என்றே மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, 2022-க்குள் புதிய இந்தியாவைக் கட்டமைப்பது பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் முக்கியமானதாகும். அந்த காலகட்டத்துக்குள் வலிமையும், தன்னிறைவும் பெற்ற தேசமாக நமது நாட்டை மாற்ற வேண்டும் என பிரதமர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில், பிற நாடுகளின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தி வல்லாதிக்க நாடாக உருவெடுக்க வேண்டும் என இந்தியா விரும்பவில்லை. 
மாறாக, கலாசாரப் பெருமைகளின் அடிப்படையிலும், வளர்ச்சியின் அடிப்படையிலுமே நாம் சிறந்த தேசமாக மாற முனைப்புடன் செயல்படுகிறோம் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. மகேஷ் கிரி, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com