பிரதமர் மோடியின் அருணாசல் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அருணாசலப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அருணாசலப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய எல்லையை ஒட்டியுள்ள அருணாசலப் பிரதேச மாநிலம், தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாகும். இந்தியத் தலைவர்கள் அங்கு பயணம் மேற்கொள்வதை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. இந்தியத் தலைவர்களின் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது. இந்திய-சீன எல்லையை வரையறையை செய்வதில், சீனா தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி, அருணாசலப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றுள்ளார். இதுதொடர்பாக, இந்தியத் தரப்பிடம் தூதரகம் மூலமாக சீனா எதிர்ப்பு தெரிவிக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியப் பிரச்னைகளை சீனாவும், இந்தியாவும் முறையாகக் கையாண்டு, தீர்வு கண்டு வருகின்றன. இந்நிலையில், எல்லைப் பிரச்னைக்கு முறையான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை இரு தரப்பும் மேற்கொண்டு வருகின்றன.
எனவே, எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் ஒருமித்த முடிவு எட்டப்படுவதற்கு, இந்தியா தான் அளித்த வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் மேலும் சிக்கல்கள் உருவாகும்.
இந்தியா, சீனா இடையே அமைந்துள்ள மெக்மோகன் எல்லைக் கோட்டுக்கும் பாரம்பரிய எல்லைக்கோட்டுக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளாக 3 இடங்கள் உள்ளன. 
அவை அனைத்தும் சீனாவுக்குச் சொந்தமானவை. அந்தப் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்காக, மெக்மோகன் எல்லைக்கோட்டை பிரிட்டன் அரசு கடந்த 1914-ஆம் ஆண்டு சட்ட விரோதமாக வரைந்தது என்றார் அவர். அருணாசலப் பிரதேசத்துக்கு இந்தியத் தலைவர்கள் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், அந்த மாநிலத்துக்கு உரிமை கொண்டாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com