நீரவ் மோடி மோசடி விவகாரத்தில் காங்கிரஸுக்கு முக்கிய பங்கு: நிர்மலா சீதாராமன்

நீரவ் மோடி மோசடி விவகாரத்தில் காங்கிரஸுக்கு முக்கிய பங்கு: நிர்மலா சீதாராமன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடிக்கு நீரவ் மோடி மோசடி செய்த விவகாரத்தில், காங்கிரஸுக்கு பங்கு இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடிக்கு வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்த விவகாரத்தில், காங்கிரஸுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியில் காங்கிரஸுக்கு முக்கிய பங்கு உள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பஞ்சாப் நேஷனல் வங்கி, நீரவ் மோடி இடையிலான கூட்டு தொடங்கியுள்ளது. 

அப்போது வழக்கம்போல் தனது சுயலாபத்துக்காக காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஊழல் முறையை கட்டவிழ்த்துள்ளது. ஆனால் பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகளை மறைக்கத் தொடங்கியது. ஆனால், மோடி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து ஊழலை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. எனவே தற்போது இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. எனவே தங்கள் மீதான குற்றத்தை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தற்போது பழியை பாஜக மீது திருப்பியுள்ளது. தொடர்ச்சியாக பொய் கூறி மக்களை திசை திருப்பும் செயல்களை காங்கிரஸ் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் மீதான இந்த ஊழல் மோசடிகளின் உண்மை தன்மையை காங்கிரஸ் உணரத் தவறிவிட்டது.

குறிப்பாக கடந்த 2013-ம் ஆண்டு முதல் தேசிய பங்கு சந்தையில் இருந்து கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 13, 2013 அன்று அந்த நகை வியாபார நிறுவனத்தின் நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்துகொண்டுள்ளார்.

நீரவ் மோடியின் ஃபையர் ஸ்டார் வைர வியாபார நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மணு சிங்க்வியின் மனைவி அனிதா, நிர்வாக இயக்குநராக உள்ள அத்வைத் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த 2002 முதல் பங்குதாரராக செயல்பட்டு வருகிறது. 

கீதாஞ்சலி குழுமத்தின் மறைமுக பங்குதாரராக காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த மோசடி அனைத்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடைபெற்றது. தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ முழு சுதந்திரத்துடன் நேர்மையாகச் செயல்படுகிறது. எனவேதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com