காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நீரவ் மோடி ஊழல் நடந்தது: நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில்தான் வைர வியாபாரி நீரவ் மோடி தொடர்புடைய ஊழல் நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நீரவ் மோடி ஊழல் நடந்தது: நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில்தான் வைர வியாபாரி நீரவ் மோடி தொடர்புடைய ஊழல் நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில், கடந்த 2017ஆம் ஆண்டில் நீரவ் மோடிக்கு சாதகமாக கடிதங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கி கையெழுத்திட்டதாக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை விமர்சித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி திரும்பத் திரும்ப பொய்களைத் தெரிவித்து, மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் கொள்கையை கடைப்பிடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் உண்மையான பாவம் (ஊழல்) நடந்துள்ளது. இத்தகைய முறைகேடு நபர்களுடன் காங்கிரஸூக்கு தொடர்புண்டு. மத்திய அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், அரசு அமைப்பில் மாற்றம் கொண்டு வந்தும், முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு காங்கிரஸ் உதவி செய்வது வழக்கம். பிறகு அனைத்தையும் அமைதியாக மூடிமறைக்கும் செயலிலும் காங்கிரஸ் ஈடுபடும் என்றார் நிர்மலா சீதாராமன்.
அப்போது அவரிடம், பாஜக கூட்டணி அரசின் ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடும் சம்பவங்கள் தொடர்வது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதற்கு நாங்கள் அவர்களைக் கைது செய்யவில்லை என்று அர்த்தமில்லை. அவர்களை மத்திய அரசு நிச்சயம் கைது செய்யும். இதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். இதுதொடர்பாக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
நீரவ் மோடியால் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளம்பர நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் கலந்து கொண்டார்? நீரவ் மோடியால் நடத்தப்படும் ஃபயர் ஸ்டார் டைமண்ட் இன்டர்நேஷனல் நிறுவனமானது, அபிஷேக் சிங்வி மனைவி இயக்குநராக இருக்கும் அத்வைத் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சொத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், அந்த இடத்தை பயன்படுத்தியது ஃபயர் ஸ்டார் டைமண்ட் இன்டர்நேஷனல் நிறுவனம்தான்.
நீரவ் மோடியின் கீதாஞ்சலி நிறுவனத்துடனான நிதித் தொடர்புகளுக்கு அலாகாபாத் வங்கியில் கடந்த 2013ஆம் ஆண்டில் இயக்குநராக பணிபுரிந்த ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் அப்போது அவர் பதவி விலகும்படி வலியுறுத்தப்பட்டார். அவரது எதிர்ப்பு கூட பதிவு செய்யப்படவில்லை என்றார் நிர்மலா சீதாராமன்.
அபிஷேக் சிங்வி மறுப்பு: இதனிடையே, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை அபிஷேக் சிங்வி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
சில்லறைத்தனமான அரசியல் வேலைகளில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஈடுபட்டுள்ளன. எனக்கோ, எனது மனைவி, மகன்களுக்கோ, கீதாஞ்சலி மற்றும் நீரவ் மோடியின் பிற நிறுவனங்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. எனது குடும்பத்தினரின் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை நீரவ் மோடியின் நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்தது. அந்த வாடகை ஒப்பந்தமும் 2017ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த இடத்தை நீரவ் மோடி நிறுவனம் காலி செய்து விட்டது. பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது சகாக்கள் மீது கிரிமினல், சிவில் அவதூறு வழக்குகள் தொடுக்கும் உரிமை எனக்கு உள்ளது என்றார் சிங்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com