குஜராத் உள்பட 17 மாநிலங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு: நீதி ஆயோக் அறிக்கை

நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
குஜராத் உள்பட 17 மாநிலங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு: நீதி ஆயோக் அறிக்கை

நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
அவற்றில் குஜராத்தின் நிலைதான் மிகவும் கவலைக்குரிய வகையில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது 1,000 ஆண்களுக்கு 854 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-14 -ஆம் ஆண்டுகளில் அந்த விகிதம் 1,000-க்கு 907-ஆக அங்கு இருந்தது. தற்போது அதில் 53 புள்ளிகள் குறைந்திருப்பதாக நீதி ஆயோக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பாலின விகிதத்தில் உள்ள வேறுபாடு அதிகரித்து வருகிறது. பெண் சிசுக் கொலைகள் அதிகரித்ததே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைத் தெரியப்படுத்தும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பிறந்த பெண் குழந்தைகளைக் கொன்றால் மிகக் கடுமையான தண்டனை விதிக்கவும் அதில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டமானது அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில இடங்களில் பெண் சிசுக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதாகத் தெரிகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது நீதி ஆயோக் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பாலின விகித வேறுபாடு 17 மாநிலங்களில் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 21 பெரிய மாநிலங்களில் இதுதொடர்பான தகவல் சேகரிக்கப்பட்டு அந்த விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் முதலிடத்தில் குஜராத் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரகண்ட், மகாராஷ்டிரம், ஹிமாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகளுக்கு எதிரான சட்டங்களை மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும் என்று நீதி ஆயோக் பரிந்துரைந்துள்ளது.
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களைப் பொருத்தவரை, அங்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது பாலின விகித வேறுபாடு குறைந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com