நீரவ் மோடி விவகாரத்துக்குத் தீர்வு: பிரதமர் அலுவலகத்துடன் நிதியமைச்சகம் ஆலோசனை

பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு பிரதமர் அலுவலகத்துடன் மத்திய நிதியமைச்சகம் விவாதித்து வருகிறது.

பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு பிரதமர் அலுவலகத்துடன் மத்திய நிதியமைச்சகம் விவாதித்து வருகிறது.
மும்பையில் தொழில்துறை அமைப்பான "அசோசேம்' சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதித் துறை இணையமைச்சர் சிவபிரதாப் சுக்லா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
நீரவ் மோடியை இந்தியாவுக்கு வரவழைப்பதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்காக, பிரதமர் அலுவலகத்துடன் மத்திய நிதியமைச்சகம் விவாதித்து வருகிறது. பிரதமர் அலுவலகம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நிதியமைச்சகம் அமல்படுத்தும். இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளி யாராக இருந்தாலும், அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் நீரவ் மோடி பங்கேற்றதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 
அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பல்வேறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையிலேயே அந்த மாநாட்டில் நீரவ் மோடி கலந்து கொண்டார்.
நீரவ் மோடி விவகாரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் தரப்பில் தவறுகள் நடைபெற்றிருந்தால், அந்த வங்கியே நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் கடன் கொடுத்த வங்கிகளுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். இதை ரிசர்வ் வங்கி ஏற்கெனவே உறுதிபடக் கூறிவிட்டது என்றார் அவர்.
தொழிலதிபர் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் இருந்து பெற்ற போலி உத்தரவாதக் கடிதங்களைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில் கடன் பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் ரூ.11,400 கோடி வரை மோசடி செய்ததை பஞ்சாப் நேஷனல் வங்கி அண்மையில் கண்டறிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com