காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி தப்பிய விவகாரம்: விசாரணையில் பாதுகாப்புக் குறைபாடுகள் அம்பலம்

லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி முகமது நவீத் ஜட் போலீஸ் காவலில் இருந்து மீட்டுச் செல்லப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி முகமது நவீத் ஜட் போலீஸ் காவலில் இருந்து மீட்டுச் செல்லப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள எஸ்எம்எச்எஸ் மருத்துவமனைக்கு பயங்கரவாதி முகமது நவீத் ஜட்டை போலீஸார் கடந்த 6-ஆம் தேதி அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் மீது லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த மற்ற பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு போலீஸார் இறந்தனர். இதையடுத்து முகமது நவீத் ஜட்டை பயங்கரவாதிகள் மீட்டுச் சென்றனர். 
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த விசாரணையின் மூலம் இந்த விவகாரத்தில் பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரஜையான பயங்கரவாதி முகமது நவீத் ஜட் கதுவா நகர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு ஆட்கொணர்வு மனு ஒன்றை முகமது நவீத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த அந்த அமர்வு, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு சிறையில் அவரை அடைக்குமாறு கடந்த 2016, நவம்பர் 19-இல் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, கதுவா சிறையில் இருந்து முகமது நவீதை ஸ்ரீநகர் சிறைக்கு உடனடியாக மாற்றுவதற்கான உத்தரவை மாநில உள்துறை அமைச்சகம் 2017, ஜனவரி 27-இல் பிறப்பித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் அப்போதைய சிறப்புச் செயலர் தில்ஷாத் ஷாஹீனால் முதன்மைச் செயலர் (உள்துறை) சார்பில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தகது. 
முகமது நவீதை சிறை மாற்றும் விவகாரத்தில் தேவையற்ற அவசரம் காட்டப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், இதுபோன்ற கொடிய பயங்கரவாதிகள் மீது பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் புதியதொரு வழக்கைப் பதிவு செய்ய முடியும் என்பதோடு அதன்கீழ் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே (ஜம்மு பிராந்தியம்) உள்ள சிறையில் அவர்களை மீண்டும் அடைக்கவும் முடியும்.
அதேபோல், முகமது நவீதை காஷ்மீர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற ஒரு நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்க முடியும். அப்போது, முகமது நவீது மிகவும் உத்வேகம் அளிகக்கப்பட்ட பயங்கரவாதி என்பதால் அவரை மற்ற கைதிகளிடம் இருந்து பிரித்து தனியாகவே வைத்திருக்க வேண்டியுள்ளது என்ற காரணத்தையும் நீதிமன்றத்தில் கூறியிருக்க வேண்டும். இதைச் செய்ய மாநில அரசு தவறிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com