கேரளத்தில் காங்கிரஸ் நிர்வாகி கொலை: மார்க்சிஸ்ட் கட்சியினர் 2 பேர் சரண்

கேரளத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேர் சரணடைந்துள்ளனர்.

கேரளத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேர் சரணடைந்துள்ளனர்.
கேரள மாநிலம், மட்டனூர் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுஹைப் என்பவர் மீது கடந்த 13ஆம் தேதி சிலர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த சுஹைப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் இருந்த மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் குற்றம்சுமத்தி வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் எம்.பி.யுமான கே. சுதாகரன், இந்த சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக பாஜக குற்றம்சுமத்தி வந்த நிலையில், காங்கிரஸூம் அதே குற்றச்சாட்டை முன்வைத்தது, கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இக்குற்றச்சாட்டை மறுத்தது.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாலூர் காவல்நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆகாஷ், ரிஜின் ராஜ் ஆகிய 2 பேர் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com