ஜனநாயகம்தான் பாஜகவின் மைய நெறியாக உள்ளது

"ஜனநாயகம்தான் பாஜகவின் மையச் சிந்தனையாக உள்ளது. அதுதான் கூட்டணிக் கட்சிகளை பாஜக அரவணைத்துச் செல்ல உதவுகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தில்லியில் பாஜகவின் புதிய தலைமைச் செயலகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி,  முரளி மனோகர் ஜோஷி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள்
தில்லியில் பாஜகவின் புதிய தலைமைச் செயலகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி,  முரளி மனோகர் ஜோஷி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள்

"ஜனநாயகம்தான் பாஜகவின் மையச் சிந்தனையாக உள்ளது. அதுதான் கூட்டணிக் கட்சிகளை பாஜக அரவணைத்துச் செல்ல உதவுகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தில்லியில் பாஜக தலைமையகம் கடந்த 35 ஆண்டுகளாக, அசோகா சாலையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தீனதயாள் உபாத்யாய மார்க் பகுதியில் பாஜகவுக்கு புதிய தலைமையகத்தைக் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டினர். இதையடுத்து, அந்த கட்டடப் பணியை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் வடிவமைத்தது. பாஜக தலைமையகத்தில் 3 கட்டடங்கள் உள்ளன. அதில், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் மூத்த தலைவர்கள் எளிதில் உரையாடத் தேவையான நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.
சுமார் 1.70 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த விழாவில் பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவில் மோடி பேசுகையில், கட்சியின் தாய் அமைப்பான பாரதிய ஜனசங்கம் கடந்த 1951-இல் உருவாக்கப்பட்டது முதல் கட்சியின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். அவர் மேலும் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தின்போது பல்வேறு தலைவர்கள் காங்கிரஸில் இருந்தனர். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு அந்தத் தலைவர்கள் தங்கள் அரசியல் கொள்கைகளைப் பரப்பவும், புதிய கட்சிகளைத் தொடங்குவதற்காகவும் காங்கிரஸில் இருந்து பிரிந்தனர்.
அவ்வாறு தொடங்கப்பட்ட கட்சிதான் ஜனசங்கம். சுதந்திரத்துக்குப் பிறகு ஒன்று, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தேசியக் கட்சிகள் இருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்பட்டதே அக்கட்சி உருவாக்கப்பட்டதற்கான காரணமாகும்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பாரதிய ஜனசங்கமும் அதன் பிறகு பாஜகவும் தேசத்தின் நலனை மனதில் கொண்டே அனைத்துப் போராட்டங்களையும் தலைமை தாங்கி நடத்தின. அதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். 
அதனால்தான் பாஜக தேசபக்தியில் தோய்ந்துள்ளது. நம் கட்சி எப்போதுமே நாட்டின் நலனுக்காகப் போராடவும் தியாகம் செய்யவும் தயாராக உள்ளது. கட்சியின் மையமான நெறியாக ஜனநாயகமே இருக்கிறது. அதன் சிந்தனை, செயல்பாடு மற்றும் செயல்திட்டத்தை அமல்படுத்துவது ஆகியவற்றை ஜனநாயக உணர்வே வழிநடத்துகிறது.
பிரதமராக வாஜ்பாய் தனது கூட்டணிக் கட்சிகளுடன் வெற்றிகரமாக இணைந்து செயல்பட்டார். பிராந்திய விருப்பங்களைக் கருத்தில் கொண்டதோடு நாட்டில் ஒரு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி அவர் இதைச் சாதித்தார். இதற்கு மூலகாரணம் நமது ரத்தத்திலேயே ஜனநாயகம் கலந்துள்ளதே ஆகும். அதனால்தான் அனைவரையும் அரவணைத்தபடி நம்மால் முன்னேறிச் செல்ல முடிகிறது. 
இந்தப் புதிய கட்டடம் கட்சியின் பணியாற்றும் இடமாக இருக்கும். ஆனால் அதன் பணிக்கான அளவு நாட்டின் எல்லை வரை விரிந்திருக்க வேண்டும். கட்சித் தொண்டர்களே அதன் ஆன்மாவாக இருக்க வேண்டும் என்றார் மோடி.
"உலகிலேயே பெரிய கட்சித் தலைமையகம்': பாஜக தலைமையகம்தான் உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி தலைமையகம் என்று அக்கட்சித் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். விழாவில் அவர் பேசியதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 694 மாவட்டங்களில் 635இல் கட்சிக்கு என்று சொந்தமாக அலுவலகம் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் ஓராண்டில் கட்சிக்கு சொந்தமாக அலுவலகம் இருக்கும். தில்லியில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தலைமையகத்தில் பல்வேறு நவீன தகவல்தொடர்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இங்கிருந்தபடி.யே நமது பிரதமரால் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்ற முடியும்.
தில்லியில் 1.70 லட்சம் சதுர பரப்பளவில் பாஜகவுக்கு புதிய தலைமையகம் கட்டப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி தலைமையகமாகும். கட்சிக்கு சொந்தமாக அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்ற ஜனசங்கம் மற்றும் பாஜக தொண்டர்களின் கனவு இதன்மூலம் நனவாகியுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 1,600 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் பாஜக மட்டும்தான், தொண்டர்களுக்கும், ஜனநாயகத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சியாகும். 
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது பிரதமரின் கனவை நிஜமாக்குவதற்கு கட்சியும், கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com