நற்பயன்களை நோக்கமாக கொண்ட பட்ஜெட்: மோடி

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நற்பயன்களை நோக்கமாகக் கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
நற்பயன்களை நோக்கமாக கொண்ட பட்ஜெட்: மோடி

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நற்பயன்களை நோக்கமாகக் கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி பேசியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை அதில் உள்ள அறிவிப்புகளை மட்டும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டாம். எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கும், பொருளாதாரத்துக்கு நல்ல பயன்களை அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் நாங்கள் அறிவித்துள்ள சீர்திருத்தங்கள் இந்தியாவின் சமூகப் பொருளாதார அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் புதிய பணி கலாசாரம் உருவாகும்.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் அமைந்த பிறகு இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி பயணித்து வருகிறது. சிறந்த நிர்வாகம், பொறுப்புணர்வு, செயல்திறன், ஜனநாயக மாண்புகளை மேம்படுத்துவது, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது ஆகியவைதான் மத்திய அரசின் முக்கியக் கொள்கைகளாக உள்ளன. முத்ரா திட்டத்தின்கீழ் 10.5 கோடி பேர் இணைந்துள்ளனர். சிறு தொழில்களுக்காக ரூ.4.60 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் மோடி.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் குறித்துப் பேசிய அவர், "நாட்டிலேயே 10 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்தைக் கொண்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரம் உருவாகும். இந்த மாநிலம் அடைந்து வரும் வேகமான வளர்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் முதலீட்டை ஈர்ப்பதில் முதன்மையான மாநிலமாக மகாராஷ்டிரம் விளங்குகிறது.
தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் 1,400 சட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் மாநில பாஜக அரசு மாற்றி அமைத்துள்ளது. மும்பை-நாகபுரி இடையே அமைக்கப்பட்டு வரும் 700 கி.மீ. தொலைவு அதிவிரைவுச் சாலையால் அப்பகுதியில் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களும் மேம்படும்' என்று தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்து மேம்பாடு: இதனிடையே, நவி மும்பையில் நடைபெற்ற சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பேசுகையில், "நமது நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் நாட்டில் சுற்றுலாத் துறையும் வளர்ச்சியடைகிறது. நாட்டில் தரமான உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை இருப்பதை விமானப் போக்குவரத்துதான் உறுதி செய்கிறது.
இந்தியாவில் சுமார் 450 விமானங்கள் இப்போது இயங்கி வருகின்றன. நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து இப்போது வரை இவ்வளவு விமானங்கள்தான் நாட்டில் இயங்குகின்றன. கடந்த ஓராண்டில் 900 புதிய விமானங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ரூ.7,900 கோடியில் துறைமுக முனையம்: மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் ரூ.7,900 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
இதன் மூலம் சரக்குகளைக் கையாளுவதில் உலகின் 33-ஆவது பெரிய துறைமுகம் என்ற பெருமையை மும்பை துறைமுகம் பெற்றுள்ளது. சீனாவில் மட்டும் இந்த அளவு சரக்குகளைக் கையாளும் திறனுள்ள 15 துறைமுகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை, மும்பை துறைமுகம்தான் மிகப்பெரியதாகும்.
மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தில் ஒரே நேரத்தில் மூன்று பெரிய சரக்குக் கப்பல்களை கையாள முடியும். 1 கி.மீ. தொலைவுக்கு சரக்குப் பெட்டகங்களை அடுக்கி வைக்க வசதி உள்ளது. வேளாண்மை உற்பத்திப் பொருள்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைக்க பிரமாண்டமான குளிர்பதன மையங்களும் இந்த முனையத்தில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com