மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் கோரிக்கை

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தனது கட்சி தயாராக இருப்பதாகவும், அதற்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் கோரிக்கை

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தனது கட்சி தயாராக இருப்பதாகவும், அதற்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் "மக்கள் சந்திப்பு' பாத யாத்திரை நடத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டி, பிரகாசம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
மக்களவையில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர குறைந்தது 54 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. எங்கள் கட்சியில் 5 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளன. எனவே ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் ஆதரவு அளிக்காவிட்டாலும், மத்திய அரசு மீது நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார் அவர். 
ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தேவையான 54 எம்.பி.க்களின் ஆதரவை எப்படி பெறப்போகிறார் என்பதை அவர் விவரிக்கவில்லை. முன்னதாக, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்றால் தங்கள் கட்சி எம்.பி.க்கள் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பதவியை ராஜிநாமா செய்வார்கள் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருந்தார். அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களும் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆந்திர பாஜக பதில்: இதனிடையே, அமராவதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆந்திர மாநில பாஜக தலைவர் கம்பம்பாடி ஹரிபாபு, ஜெகன் மோகனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு அளித்து வரும் ஆதரவின் மூலம்தான் மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய அரசு நிதியுதவியுடன் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தப்படும் திட்டங்களின் முழுமையான புள்ளி விவரங்களை மக்களிடம் விரைவில் எடுத்துச் செல்ல இருக்கிறோம். அதன், மூலம் மத்திய அரசைக் குறை கூறுபவர்களுக்கு ஆந்திர மக்களே உரிய பதிலைக் கொடுப்பார்கள்.
ஆந்திர அரசுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு நிதி உதவிகள் அனைத்துமே மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு மேலானதுதான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் வாக்குறுதியளிக்கப்பட்டவற்றில் துகராஜபட்டினம் துறைமுகம், கடப்பா உருக்கு ஆலை, விசாகப்பட்டினம் ரயில்வே மண்டலம் ஆகியவைதான் இப்போது நிறைவேற்றப்படாமல் உள்ளன. இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். மத்திய, மாநில அரசுகளிடையே சிறப்பான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும். மோதல் போக்கினால் புதிய பிரச்னைகள் மட்டுமே ஏற்படும்.
இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசு எதையுமே செய்யவில்லை என்று சிலர் விஷமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனை நாங்கள் விரைவில் முறியடிப்போம் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சர்களும், பாஜக, தெலுங்கு தேசம் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com