பாஜக ஆட்சியில் கர்நாடகம் வளம் பெறும்: பிரதமர் நரேந்திர மோடி

வரும் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் கர்நாடகம் வளம் பெறும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மைசூரில் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் எடியூரப்பா உள்ளிட்ட கட்சி நிர்வாக
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மைசூரில் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் எடியூரப்பா உள்ளிட்ட கட்சி நிர்வாக

வரும் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் கர்நாடகம் வளம் பெறும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜகவின் மாற்றத்துக்கான பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: 
விடுதலைக்குப் பிறகு 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், திட்டங்களை வகுத்ததே தவிர அவற்றை செயல்படுத்த முனைப்புக்காட்டவில்லை. ஆண்டுதோறும் ரயில் துறை வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்து, புதிய ரயில் சேவைகள், ரயில் நிலையங்கள், இருப்புப்பாதைகள் போன்ற திட்டங்களை அறிவித்தனர். 
ஆனால், அவற்றை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். அறிவிப்புகளாக இருந்த திட்டங்களை எனது தலைமையிலான பாஜக அரசு துரிதகதியில் செயல்படுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கிடப்பில் போடும் கலாசாரத்தை மாற்றி வருகிறோம். 
முந்தைய அரசுகள் வகுத்த ரயில் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.9 லட்சம் கோடி தேவைப்படும். இத் திட்டங்கள் தாமதமானால் செலவு மதிப்பீடு மேலும் கூடும். இதை கவனத்தில் கொண்டே புதிய ரயில் திட்டங்களை அறிவிக்காமல், பழைய திட்டங்களைச் செயல்படுத்துவதில் முனைப்புக்காட்டி வருகிறோம்.
கடந்தமுறை பெங்களூருக்கு வந்தபோது, கர்நாடகத்தில் 10 சதவீத தரகுத்தொகை ஆட்சி நடப்பதாகக் கூறினேன். ஆனால், தரகுத்தொகை 10 சதவீதத்துக்கும் மேல் வசூலிக்கப்படுகிறதாம். கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸýக்கு மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையில்லை. மாறாக, பதவியைக் காப்பாற்றிக்கொண்டு கட்சியினருக்கு தேவையானவற்றை செய்துவருவதே காங்கிரஸ் கட்சியினருக்கு நோக்கமாக உள்ளது. 
காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்கும் வரை கர்நாடக மக்கள் துன்பப்படுவதையும், அரசு வளம் கொள்ளையடிக்கப்படுவதையும் தடுக்க முடியாது. இதை மக்கள் மன்னிக்கக் கூடாது. தரகுத்தொகை பெறும் காங்கிரஸ் நீடிக்க வேண்டுமா? வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதையே நோக்கமாக கொண்டு ஆட்சி செய்யும் பாஜக அரசு வேண்டுமா? என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி தனது கடந்தகால ஊழலுக்காக வெட்கப்படவும் இல்லை, வேதனைப்படவும் இல்லை. 
கர்நாடகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தர மத்திய அரசு நிதி ஒதுக்க தயாராக இருந்தும், அதை மாநில காங்கிரஸ் அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு கட்சி, ஒரு குடும்பம் நமது நாட்டை 50 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது. ஆனால், 40 கோடி மக்கள் இன்னும் தங்கள் வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக் கொள்ள போராடும் நிலைதான் உள்ளது.
மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வீடுகள் மற்றும் மின் வசதி இல்லை. இந்தநிலையில், மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் அக்கட்சித் தலைவர்கள் மக்களுக்கு புதிய வாக்குறுதிகளைத் தந்துவருகிறார்கள். இனிமேலும் காங்கிரஸ் கட்சியை நம்ப மக்கள் தயாராக இல்லை. 
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்கும் என் கனவு நனவாகும். அதற்காக கர்நாடக மக்கள் பாஜகவுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா,மத்திய அமைச்சர்கள் சதானந்த கெüடா, அனந்த்குமார், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com