ம.பி., ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து பிரசாரம் செய்வேன்: ஹார்திக் படேல்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவை எதிர்த்துப் பிரசாரம் செய்யப் போவதாக படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டக்
ம.பி., ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து பிரசாரம் செய்வேன்: ஹார்திக் படேல்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவை எதிர்த்துப் பிரசாரம் செய்யப் போவதாக படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டக் குழுவின் தலைவர் ஹார்திக் படேல் தெரிவித்தார்.
குஜராத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்எல்ஏ-வுமான அல்பேஷ் தாக்குர் கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில், "மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை நான் ஒருங்கிணைப்பேன்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த படேல் சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைவரான ஹார்திக் படேல், மத்தியப் பிரதேசத்தில் திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டார். தலைநகர் போபாலில் நடைபெற்ற படேல் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். இதனிடையே, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தீவிரமாகச் செயல்படுவேன். இந்த மாநிலங்களில் ஆளும் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரமும் மேற்கொள்வேன். மத்தியப் பிரதேசத்தில் இனி பலமுறை பயணம் செய்வேன். முடிந்தால் என்னைத் தடுத்து நிறுத்தட்டும்.
இங்கு விவசாயிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக நான் தொடர்ந்து பேசுவேன்.
என்னை மத்தியப் பிரதேசத்துக்கு வரவிடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. "அங்கு செல்ல வேண்டாம். மீறிச் சென்றால் வழக்குகள் பதிவு செய்யப்படும்' என்று என்னிடம் கூறப்பட்டது. 
எனது வருகை சமூகத்தைப் பிளவுபடுத்திவிடும் என்று அவர்கள் சொன்னார்கள். 
நான் ஜாதியவாதத்தைப் பரப்புவதாக சிலர் கூறுகின்றனர். விவசாயிகள் குறித்தும் இளைஞர்கள் குறித்தும் பேசுவதுதான் ஜாதியவாதம் என்றால் அதைச் செய்யவே நான் விரும்புவேன்.
ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் அரசியல்தான் தேசியவாதம் என்று சிலர் (பாஜக) கூறுகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறார். ஆனால் அவர் எதையும் எடுப்பாரே தவிர கொடுக்க மாட்டார். இந்த மாநிலத்தில் ஊழல் அமைதியான முறையில் நடைபெறுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com