ரூ.11,400 கோடி வங்கி முறைகேடு: சிறப்பு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி உள்ளிட்டோர் ரூ.11,400 கோடி முறைகேடு செய்துள்ளது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல்
ரூ.11,400 கோடி வங்கி முறைகேடு: சிறப்பு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி உள்ளிட்டோர் ரூ.11,400 கோடி முறைகேடு செய்துள்ளது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தில்லியைச் சேர்ந்த இரு வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை தனித்தனியாக தாக்கல் செய்துள்ள இந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி முறைகேடு செய்த நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவரை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதிகபட்சம் 2 மாதத்தில் அவரை நாட்டுக்கு திருப்பி கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த நிதி முறைகேடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தலைமை வகிக்க வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் விசாரணை அமைப்புகள் இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கக் கூடாது.
வங்கிகளில் நடைபெறும் முறைகேடு, நாட்டு மக்களையும், அரசின் நிதி ஆதாரத்தையும் நேரடியாக பாதிக்கிறது. ஒரு சில தொழிலதிபர்கள் வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்துச் செல்வது நாட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளிலும் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. வங்கிகள் கடன் கொடுப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வகுத்துள்ள விதிகளின்படி பல வங்கிகளின் அதிகாரிகள் செயல்படாததுதான் இதுபோன்ற முறைகேடுகளுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. எனவே, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தண்டனைகளைக் கடுமையாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரூ.10 கோடிக்கு மேல் வங்கிகள் கடன் வழங்கும்போது அது தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாக்க நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. வைர வியாபாரியான நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சோக்ஸியின் சொத்துகள் முடக்கம்: இதனிடையே, மெஹுல் சோக்ஸி, அவருக்கு சொந்தமான கீதாஞ்சலி குழுமத்துக்கு சொந்தமாக மும்பையில் உள்ள கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் உள்ளிட்ட 7 சொத்துகளை வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை முடக்கினர்.
முன்னதாக, நீரவ் மோடிக்கு சொந்தமான 105 வங்கிக் கணக்குகள், மற்றும் 19 சொத்துகளை கடந்த வாரம் வருமான வரித் துறையினர் முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 3 வங்கி அதிகாரிகள் கைது: இதனிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் பணியாற்றும் 3 அதிகாரிகளை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது. வங்கியின் அந்நியச் செலாவணி பிரிவு தலைமை மேலாளர் பீச்சு திவாரி, இரண்டாம் நிலை மேலாளர் யஷ்வந்த் ஜோஷி மற்றொரு அதிகாரி பிரஃபுல் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வங்கி அதிகாரிகளின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com