ரோட்டோமேக் உரிமையாளர் மற்றும் அவரது மகனிடம் சிபிஐ விசாரணை

ரோட்டோமேக் விவகாரம் தொடர்பாக அதன் உரிமையாளர் மற்றும் அவரது மகனிடம் சிபிஐ தரப்பில் புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ரோட்டோமேக் உரிமையாளர் மற்றும் அவரது மகனிடம் சிபிஐ விசாரணை

ரோட்டோமேக் நிறுவனம் வங்கிகளில் ரூ.3,695 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி உள்ளிட்ட சிலர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும், அந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகாரும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோட்டோமேக் நிறுவனம் ரூ.85 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 14 வங்கிக் கணக்குகள் திங்கள்கிழமை இரவு முடக்கப்பட்டன' என்று தெரிவித்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் ரோட்டோமேக் பேனா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி. இவர், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக பரோடா வங்கி நிர்வாகம், சிபிஐயிடம் புகார் அளித்தது. 

அதனடிப்படையில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. முதலில் அவர், ரூ.800 கோடி மோசடி செய்ததாக மதிப்பிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இவர், தனது நிறுவனத்துக்காக, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, அலாகாபாத் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய 7 வங்கிகளில் ரூ.2,919 கோடி கடன் பெற்றுள்ளார். 

அந்தத் தொகையை, கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து அவர் பெற்றுள்ளார். ஆனால், அவர் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. தற்போது, வட்டியும், அசலுமாகச் சேர்த்து ரூ.3,695 கோடியை அவர் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில், ரோட்டோமேக் நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோரிடம் இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ, தில்லியில் உள்ள தலைமையகத்தில் புதன்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள் இருவரும் தானாக நேரில் வந்து ஆஜராகி விளக்கமளித்து வருவதாக சிபிஐ அதிகாரி தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல் ரோட்டோமேக் நிறுவனத்தின் மீது கறுப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com