காவிரி இறுதித் தீர்ப்பு I

தமிழகத்தின் உயிர்நாடி பிரச்னையான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில், காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீர் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவை நூற்றுக்கணக்கான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டன. 
காவிரி இறுதித் தீர்ப்பு I

தமிழகத்தின் உயிர்நாடி பிரச்னையான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில், காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீர் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவை நூற்றுக்கணக்கான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டன. 
ஆனால் அவை நீரிலிடப்பட்ட கோலங்களைப்போல் கரைந்து , தமிழக விவசாயிகளின் மனதில் நீங்கா வடுவாக மாறிவிட்டன.
1990-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்கு பிறகு அளிக்கப்பட்ட இறுதி உத்தரவையும் செயல்படுத்த மறுத்த கர்நாடகத்துக்கு எதிராக, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் 11 ஆண்டுகள் தமிழக அரசு, இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டதால், இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்ன? தமிழகத்துக்கு தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது ஏன்? அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஏன் மேல் முறையீடு செய்யக் கூடாது? கர்நாடகத்துக்கு தண்ணீர் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து விரிவாகவும், ஆழமாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 
காவிரி பிரச்னையின் தொடக்கம்:
மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தானை 1799-ம் ஆண்டு ஆங்கிலேயர் தோற்கடித்த பின்பு, மைசூரில் ஆட்சிக்கு வந்த வாடியார் மன்னர் காவிரி நதியில் மேற்கொண்ட சீரமைப்பு பணிகளை அப்போதைய மதராஸ் மாகாணத்தின் தஞ்சை ஆட்சியர் எதிர்த்துள்ளார். அப்போது இருந்தே காவிரி நதி நீர் பிரச்னை தொடங்கி விட்டது என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
அதன் பின்னர் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக சென்னை - மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892, 1924 -ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு போடப்பட்ட 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, இரண்டு பகுதிகளிலும் அணைகள் கட்டப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாநிலமும், 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு பிறகு மைசூர் புதிய மாநிலமாகவும் உதயமானது. 
ஆனால் காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. சுமார் 15 ஆண்டுகள் தொடர்ந்த இந்த பிரச்னைக்கு தீர்வு காண மைசூர் அரசுக்கு எதிராக 1972-ம் ஆண்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. 
பேச்சுவார்த்தை மூலமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்பதால் 29-5-1972-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, மைசூர் முதல்வர் டி. தேவராஜ் உர்ஸ், கேரள முதல்வர் சி. அச்சுத மேனன் ஆகியோர் மத்திய நீர் பாசனத் துறை அமைச்சர் தலைமையில் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், காவிரி நீரை இரு மாநிலங்களும் பருவத்துக்கு ஏற்றவாறு சாகுபடிக்கு பயன்படுத்துவது, மக்கள் தேவைக்கு பயன்படுத்துவது, நீர் மின் திட்டங்களுக்கு பயன்படுத்துவது, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த காவிரி உண்மை கண்டறியும் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
உண்மை கண்டறியும் குழுவின் ஆய்வு அறிக்கையை கர்நாடகம் ஏற்க மறுத்தது. இந்தப் பிரச்னை தொடர்பாக பெங்களூருவில் 23-11-1985-இல் மாநில முதல்வர்கள் பங்கேற்ற கடைசி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு பேச்சுவார்த்தைகளால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது என்பதால், காவிரி நடுவர் மன்றம் அமைப்பதே ஒரே தீர்வாக அமையும் என்று தமிழக அரசு 6-07-1986-இல் வலியுறுத்தியது.
இதையடுத்து, 1990 ஜூன் 2-ம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. பின்னர் 1991, ஜூன் 25-ம் தேதி நடுவர் மன்றம் கர்நாடகாவுக்கு இடைக்கால உத்தரவு அளித்தது.
அதில், ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை மேட்டூர் அணையில் 205 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் அளிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்துக்கு தமிழகம் 6 டிஎம்சி நீரையும் அளிக்க வேண்டும். காவிரி நீரை பயன்படுத்தி கர்நாடகம் 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடியை உயர்த்தக் கூடாது என தெரிவித்தது. 
கேரளம் இடைக்கால தீர்வு வேண்டும் என்று கோராத காரணத்தால் கேரளத்துக்கு இடைக்கால நிவாரணம் அப்போது அளிக்கப்படவில்லை.
நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவு செல்லாது என 25-07-1991-இல் கர்நாடக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதை செல்லாது என உச்ச நீதிமன்றம் பின்னர் ரத்து செய்தது.
11-08-1998-இல் காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவு அரசாணையில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மேலும், இடைக்கால உத்தரவை அமல்படுத்த காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் தலைமையில் சர்ச்சைக்குரிய மாநில முதல்வர்கள் இடம் பெறும் இந்த ஆணையம் 14-07-2000-இல் செயல்பாட்டுக்கு வந்தது. 8-9-2002-இல் காவிரி நதி நீர் ஆணையத்தின் முதல் கூட்டம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடி, தமிழகத்துக்கு 0.8 டிஎம்சி அளிக்க உத்தரவிட்டது. 
5-2-2007-இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில், வழக்கமான மழை பொழிவு காலத்தில் தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி நீரை கணக்கிட்டு தீர்ப்பு வழங்கியது. காவிரி நீரை முக்கியமாக வைத்து தமிழகம் பாசனம் செய்து வருவதால், மாதக் கணக்கீட்டில் கர்நாடகம் அளிக்க வேண்டிய நீரின் அளவும் தெளிவாக வகுக்கப்பட்டது. 
அதன்படி, ஜூன் - 10, ஜூலை -34, ஆக்ஸ்ட் 50, செப்டம்பர் 40, அக்டோபர் 22, நவம்பர் 15, டிசம்பர் 8, ஜனவரி 3, பிப்ரவரி 2.5, மார்ச் 2.5, ஏப்ரல் 2.5, மே 2.5 டிஎம்சிகள் என மொத்தம் 192 டிஎம்சி நீரை, மாதம் 10 நாள்கள் இடைவெளியில் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நீர் அளவுகோளை மாற்றக் கூடாது எனவும் நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு கண்டிப்பாக தெரிவித்தது.
மேலும், மதராஸ் -மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892, 1924 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லும் என காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வழக்கு தொடுத்ததால், தமிழகத்துக்கான நீரை, பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடி நீர் ஒதுக்கீடு செய்தது.
19-9-2012-இல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 7- வது காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் கூடி, தமிழகத்துக்கு 0.8 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட்டது. (இதற்கு கர்நாடகம் சம்மதிக்காத காரணத்தால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தையும், காவிரி கண்காணிப்பு குழுவையும் மாறி மாறி அவ்வப்போது தமிழகம் சொற்ப நீரைப் பெற்று வந்தது). 19-02-2013-இல் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இதையடுத்து, காவிரி பிரச்னைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் ஒரே தீர்வு, அதை விரைவில் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 19-03-2013-இல் முறையிட்டது. 
அதன் பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படியே கர்நாடகத்திடம் இருந்து தமிழகம் தண்ணீர் பெற்று வந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காவிரி வழக்குகள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட்டது.
நீண்ட வாதங்களையும், ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆய்வுத் தகவல்கள், ஆவணங்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 16-ம் தேதி இறுதித் தீர்ப்பை அறிவித்தது.
மொத்தம் 465 பக்கங்கள் கொண்டதாக காவிரி இறுதித் தீர்ப்பு அமைந்துள்ளது. அதில், தமிழகத்துக்கான நீரின் பங்கை குறைத்ததற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com