தொழில் தொடங்க சீனாவைவிட இந்தியாவே உகந்த நாடு: டிரம்ப் மகன்

தொழில் தொடங்குவதற்கு, சீனாவைவிட இந்தியாவே உகந்த நாடாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தில்லியில் தொழில் பங்குதாரர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜூனியர் டொனால்டு டிரம்ப் (நடுவில்).
தில்லியில் தொழில் பங்குதாரர்களுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜூனியர் டொனால்டு டிரம்ப் (நடுவில்).

தொழில் தொடங்குவதற்கு, சீனாவைவிட இந்தியாவே உகந்த நாடாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டொனால்டு டிரம்ப், ஒரு வார கால தொழிற்முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். டிரம்ப் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருக்கும் அவர், இந்தியாவில் 'டிரம்ப் டவர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை ஊடக ஆசிரியர்களை ஜூனியர் டிரம்ப் சந்தித்தார். அப்போது, டிரம்ப் நிறுவனமானது, நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்காக சீனாவைவிட இந்தியாவை முதலில் தேர்வு செய்தது ஏன்? என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: 
என்னைப் பொருத்தவரை, தொழில் தொடங்குவதற்கு சீனாவைவிட இந்தியாவே உகந்த நாடாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறேன்.
ஊழலையும், பினாமி பரிமாற்றங்களையும் ஒழிக்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் முதலீடுகள் அதிகரிக்கும் என்றார் ஜூனியர் டிரம்ப்.
டிரம்ப் நிறுவனம், இந்தியாவின் புணே, மும்பை, குருகிராம், கொல்கத்தா ஆகிய நகரங்களில் 'டிரம்ப் டவர்ஸ்' அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில், குருகிராமில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டம் தான் மிகப் பெரியதாகும்.
அதன்படி, 47 மாடிகளுடன் 254 ஆடம்பர குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 2023 மார்சில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளின் விலை ரூ.5 கோடி முதல் ரூ.11 கோடி வரையாகும். உள்ளூரைச் சேர்ந்த இரு மனை வணிக நிறுவனங்களுடன் இணைந்து, இத்திட்டத்தை டிரம்ப் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தற்போது இந்தியா வந்துள்ள ஜூனியர் டிரம்ப், தில்லியில் இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com