உ.பி.யில் ரூ.20,000 கோடி முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம்: பிரதமர் மோடி அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பின்தங்கிய பகுதியான புந்தேல்கண்டில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், அங்கு ரூ.20,000 கோடி முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம்
லக்னௌவில் புதன்கிழமை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.
லக்னௌவில் புதன்கிழமை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பின்தங்கிய பகுதியான புந்தேல்கண்டில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், அங்கு ரூ.20,000 கோடி முதலீட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அறிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் 2 நாள் முதலீட்டாளர்கள் மாநாடு புதன்கிழமை தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசிதாவது:
நாட்டில் இரு இடங்களில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையங்கள் அமையவிருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது. அதில் ஒரு மையத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.20,000 கோடி முதலீட்டில் அமையவிருக்கும் இந்த மையம் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதேபோல, ஜேவார், குஷிநகர் ஆகிய இரு நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமையவிருக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் இருந்த எதிர்மறையான தாக்கங்களை, முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். உத்தரப் பிரதேச மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக அவர் திகழ்கிறார். உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அவரது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டக்குரியவை என்றார் பிரதமர் மோடி.
ரூ.4.28 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.4.28 லட்சம் கோடி மதிப்புள்ள 1,045 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறிதாவது: 
உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். இதுவரை ரூ.4.28 லட்சம் கோடி மதிப்புள்ள 1,045 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பிரதமரின் வழிகாட்டுதல் மற்றும் ஆசியுடன் புதியதொரு உத்தரப் பிரதேசத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மேற்கண்ட ஒப்பந்தங்கள் முறையாக செயலாக்கம் பெறுவதை நானே நேரடியாக கண்காணிப்பேன்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 11 மாதங்களில் சட்டத்தின் ஆட்சியை நிறுவியிருக்கிறோம். மாநிலத்தில் அமைதியான சூழல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மாநில முதலீட்டு வாரியமும் அமைக்கப்பட்டது. இதுபோன்ற முயற்சிகளுக்கு, தற்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்றார் ஆதித்யநாத்.
ஆதித்ய பிர்லா குழுமம் ரூ.25,000 கோடி முதலீடு: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக ஆதித்ய பிர்லா குழுமம் தெரிவித்துள்ளது. சிமெண்ட், ரசாயன உற்பத்தித் துறையில் இந்த முதலீடுகள் செய்யப்படும் என்று அக்குழுமத்தின் தலைவர் குமார மங்கலம் பிர்லா மாநாட்டின்போது தெரிவித்தார்.
இதேபோல, உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com