செல்லிடப்பேசிகளுக்கான 10 இலக்க எண்ணில் மாற்றம் இல்லை

செல்லிடப்பேசிகளுக்கான சிம் கார்டு எண் 10 இலக்கத்திலேயே தொடரும். சிம் கார்டை பயன்படுத்தி கார்,
செல்லிடப்பேசிகளுக்கான 10 இலக்க எண்ணில் மாற்றம் இல்லை

செல்லிடப்பேசிகளுக்கான சிம் கார்டு எண் 10 இலக்கத்திலேயே தொடரும். சிம் கார்டை பயன்படுத்தி கார், கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட கருவிகளை இயக்குவதற்கு மட்டுமே 13 இலக்க எண் பயன்படுத்தப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செல்லிடப்பேசிகளுக்கான எண் 13 இலக்கமாக மாற்றப்படுகிறது என்று தகவல் வெளியானது. ஆனால், இந்த 13 இலக்க எண் செல்லிடப்பேசிகளுக்கானது அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சிம் கார்டுகளைப் பயன்படுத்தி கண்காணிப்பு கேமரா, கார், இணையத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு மீட்டர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை இயக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இப்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பயன்பாட்டுக்காகவே, அதாவது சிம் கார்டை பயன்படுத்தி சாதனங்களுக்கு இடையே (எம்-டூ-எம்) தொடர்பை ஏற்படுத்துவதற்கு மட்டுமே 13 இலக்க எண் பயன்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சாதனங்களை விற்பனை செய்பவர்களுக்கு அண்மையில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், எம்-டூ-எம் பயன்பாட்டுக்கான சிம் கார்டுகளுக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 13 இலக்கம் வழங்கப்படும். இப்போது 10 இலக்கத்தில் செயல்படும் எம்-டூ-எம் சிம் கார்டுகள், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 13 இலக்கத்துக்கு மாற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுவே, பொதுமக்கள் செல்லிடப்பேசியில் பேசுவதற்காக பயன்படுத்தும் சிம் கார்டுக்கும் 13 இலக்க எண் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவக் காரணமாக அமைந்துவிட்டது. செல்லிடப்பேசிக்கான சிம் கார்டு தொடர்ந்து 10 இலக்கத்திலேயே செயல்படும் என்பதை பிஎஸ்என்எல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரை தளத்திலும் பதிவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com