பார் கவுன்சில் தேர்தல் புதிய விதிமுறைகள் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பார் கவுன்சில் தேர்தல் புதிய விதிமுறைகள் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பார் கவுன்சில் தேர்தல் குறித்து புதிய விதிமுறைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கே. சந்திரமோகன் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். 
அதில், 'பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் சிறப்புக் குழு வெளியிட்ட தீர்மானங்களுக்கு கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சிறப்புக் குழு வெளியிட்ட தீர்மானங்களை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டிப்பதன் மூலம், சென்னை உயர் நீதிமன்றம் தவறு இழைத்துள்ளது. எனவே, பார் கவுன்சில் தேர்தல் குறித்த புதிய விதிமுறைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும், வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், தற்போதுள்ள விதிமுறைகளின்படியே தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் சல்மான் குர்ஷித், வழக்குரைஞர் டி. குமணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்ற விதிமுறையைத் தவிர்த்து மற்ற அனைத்துக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கப்படுகிறது' எனத் தெரிவித்தார். 
பின்னணி: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் பாஸ்கர் மதுரம் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் இரு மனுக்களைத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிபதிகள் என். கிருபாகரன், ஆர். தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குற்றப் பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்தல் அலுவலர்கள், தமிழக காவல் துறைத் தலைவர், வருமான வரித் துறையினர் ஆகியோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கையை கடந்த மாதம் 25-ஆம் தேதி தேர்தலை நடத்தும் சிறப்புக் குழு வெளியிட்டது. மேலும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும். 
எந்த அரசியல் கட்சிகளிலும் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட சிறப்புக் குழுவால் இயற்றப்பட்ட 9 தீர்மானங்களும் விதிகளாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com