பிஎன்பி மோசடி விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு இடதுசாரிகள் ஆதரவு; திரிணமூல் எதிர்ப்பு

வைர வியாபாரி நீரவ் மோடி தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில்,

வைர வியாபாரி நீரவ் மோடி தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ராகுல் காந்தி தலைமையில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் நெறிமுறைக் குழு கூட்டத்தில், பிஎன்பி மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க மத்திய அரசை வலிறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. 
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'ஹர்ஷத் மேத்தா, கேதான் பரேக் தொடர்புடைய முறைகேடுகளில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டதை போல, பிஎன்பி மோசடி விவகாரத்திலும் அமைக்கப்பட வேண்டும். 
இதுதொடர்பாக, நிதியமைச்சரை வரவழைத்து, பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் இருந்து பெற வேண்டும். வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொழிலதிபர்கள், மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின்போது அரசு செலவில் அவருடன் சென்ற தொழிலதிபர்கள் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்' 
என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிஎன்பி விவகாரத்தில் சட்டரீதியிலான நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்றாலும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையும் வேண்டும். அப்போதுதான், பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் எதிர்ப்பு: இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரையன் கூறியதாவது:
பிஎன்பி மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பதால் எந்த தீர்வும் கிடைக்காது. மாறாக உண்மைகள் வெளிவருவதில் தாமதமே ஏற்படும். போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு தாக்கல் செய்த அறிக்கை, எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டது. ஹர்ஷத் மேத்தா, கேதான் பரேக் விவகாரங்கள், நாடாளுமன்ற நிலைக்குழுவில் இன்னமும் நிலுவையில்தான் உள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com