பிஎன்பி வங்கி மோசடி: 17 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி தொடர்பாக, மும்பையில் பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியின் 4 நிழல் நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 17 இடங்களில் அமலாக்கத்

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி தொடர்பாக, மும்பையில் பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியின் 4 நிழல் நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 17 இடங்களில் அமலாக்கத் துறையினர் ஏழாவது நாளாக புதன்கிழமை சோதனை நடத்தினர். இதில், ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. இத்துடன் இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை ரூ.5,736 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது.
இது தவிர வருமான வரித் துறையினர் ரூ.145.74 கோடி பணம் இருந்த 141 வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்புக் கணக்குகளை முடக்கியுள்ளனர். இதனிடையே, மும்பையின் அலிபாக் பகுதியில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.32 கோடி மதிப்புள்ள பண்ணை இல்லத்தை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை மூடி சீல் வைத்தனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி நடைபெற்ற விவகாரத்தை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், நீரவ் மோடி, அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெஹுல் சோக்ஸி ஆகியோரின் நிழல் நிறுவனங்களுக்கு எதிரான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, மும்பையில் ஓபரா ஹவுஸ், பெட்டார் ரோடு, கோரேகான்(கிழக்கு), போவாய் ஆகிய 4 இடங்களில் உள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான நிழல் நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 17 இடங்களில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், ரூ.5,736 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மும்பையில் உள்ள அமலாக்கத் துறை பிராந்திய அலுவலகத்தில் இந்த வாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
இதனிடையே, நீரவ் மோடிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி உத்தரவாதக் கடிதங்களை வழங்கியது எப்படி? அதைத் தொடர்ந்து வங்கி பரிவர்த்தனைகள் நடந்தது எப்படி என்பது குறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரிகளிடம் விசாரித்து வருவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், நீரவ் மோடியிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிஎன்பி வங்கியின் பொதுமேலாளர் கைது: இதனிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் தில்லி அலுவலக பொது மேலாளர் ராஜேஷ் ஜிண்டாலை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
இவர், கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து 2011-ஆம் ஆண்டு வரை, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையின் பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார். அந்த காலகட்டத்தில்தான், நீரவ் மோடிக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான உத்தரவாதக் கடிதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com