மேற்கு வங்கம்: டார்ஜீலிங்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை திரும்ப பெறலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் நிறுத்தப்பட்டுள்ள மத்தியப் படைகளை மார்ச் மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு, அங்கிருந்து திரும்பப் பெறுவதற்கு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் நிறுத்தப்பட்டுள்ள மத்தியப் படைகளை மார்ச் மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு, அங்கிருந்து திரும்பப் பெறுவதற்கு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் தனி மாநிலம் கோரி போராட்டம் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், டார்ஜீலிங்கில அமைதி திரும்பத் தொடங்கியதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறுவது என்று மத்திய அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து மேற்கு வங்க அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், டார்ஜீலிங்கில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவித்து, அங்கிருந்து மத்திய பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறுவதற்கு தடை விதித்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, 'டார்ஜீலிங்கில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகள், மத்திய அரசின் நிர்வாகத்தின்கீழ் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட வேண்டியவை ஆகும். ஆதலால், அந்த படைகளை திரும்பப் பெறுவதற்கு அனுமதியளிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், 'டார்ஜீலிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் 4 படைப்பிரிவு மத்திய பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறுவதற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து செய்யப்படுகிறது; அங்கிருந்து மார்ச் மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு படைகளை திரும்பப் பெறலாம்' என்றனர்.
முன்னதாக, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டார்ஜீலிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 15 படைப்பிரிவுகளில் 7 படைப்பிரிவுகளை மட்டும் திரும்பப் பெற அனுமதியளித்திருந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 8 படைப்பிரிவுகளில் 4 படைப்பிரிவுகளை மட்டும் திரும்பப் பெறலாம் என்று அறிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com