லால் பகதூர் சாஸ்திரியின் ரூ.5 ஆயிரம் கடனை திருப்பி அடைத்த குடும்பத்தினர்!

நாட்டின் 2ஆவது பிரதமரான மறைந்த லால் பகதூர் சாஸ்திரி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிலுவையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் கடனை, அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்தினர் திரும்ப அடைத்துள்ளனர்.
லால் பகதூர் சாஸ்திரியின் ரூ.5 ஆயிரம் கடனை திருப்பி அடைத்த குடும்பத்தினர்!

நாட்டின் 2ஆவது பிரதமரான மறைந்த லால் பகதூர் சாஸ்திரி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிலுவையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் கடனை, அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்தினர் திரும்ப அடைத்துள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
கடந்த 1965ஆம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரி, பியட் கார் வாங்க விரும்பினார். அப்போது அதன் விலை ரூ.12 ஆயிரமாக இருந்தது. ஆனால் அவரிடம் ரூ.7 ஆயிரம் மட்டும்தான் இருந்தது. இதையடுத்து, மீதமுள்ள ரூ.5 ஆயிரத்துக்கு கடன் கோரி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் லால் பகதூர் சாஸ்திரி விண்ணப்பித்தார். அதன்படி, அவருக்கு ரூ.5 ஆயிரம் அதே நாளில் கடனாக கிடைத்தது.
அப்போது பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளிடம், சாமானிய மக்களுக்கும் இதுபோல் ஒருநாளில் கடன் அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், சோவியத் யூனியனின் தாஸ்கண்டுக்கு சென்றிருந்தபோது லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966ஆம் ஆண்டில் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, லால் பகதூர் சாஸ்திரி வாங்கிய ரூ.5 ஆயிரத்தைக் கேட்டு, அவரது மனைவிக்கு பஞ்சாப் 
நேஷனல் வங்கி கடிதம் எழுதியது.
இதை பார்த்த லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி, லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தில் இருந்து கடன் தொகை திருப்பி அடைக்கப்படும் என்று உறுதியளித்தார். இதன்படி, ரூ.5 ஆயிரத்தையும் லால் பகதூர் சாஸ்திரி மனைவி திருப்பி அடைத்தார்.
இந்த தகவலை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் இணையதளங்களில் அண்மையில் பகிர்ந்து கொண்டார். இதை பார்த்த லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, அந்தத் தகவல் உண்மைதான் என்று உறுதி செய்துள்ளார்.
லால் பகதூர் சாஸ்திரியால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெறப்பட்டு வாங்கப்பட்ட 1964ஆம் ஆண்டு தயாரிப்பு பியட் கார், தில்லியில் இருக்கும் சாஸ்திரியின் நினைவிடத்தில் பார்வைக்கு தற்போது வைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்துவிட்டு, வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பியோடிய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், மறைந்த பிரதமர் ஒருவரால் அதேவங்கியில் நிலுவையில் வைக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் கடனை அவரது மறைவுக்குப் பிறகு குடும்பத்தினர் திருப்பி அடைத்திருப்பது நெஞ்சை நெகிழ வைப்பதாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com