காலிஸ்தான் தீவிரவாதிக்கு விசா கிடைத்தது எப்படி?: வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆய்வு

சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு பிரிக்கக் கோரிய பயங்கரவாதியும், கனடாவில் வசித்துவருபவருமான ஜஸ்பால் அத்வாலுக்கு இந்தியா வர நுழைவு இசைவு வழங்கியது எப்படி?
மும்பை நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டினுடன் பங்கேற்ற காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வால்.
மும்பை நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டினுடன் பங்கேற்ற காலிஸ்தான் தீவிரவாதி ஜஸ்பால் அத்வால்.

சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு பிரிக்கக் கோரிய பயங்கரவாதியும், கனடாவில் வசித்துவருபவருமான ஜஸ்பால் அத்வாலுக்கு இந்தியா வர நுழைவு இசைவு வழங்கியது எப்படி? என்று விசாரணை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தில்லியில் உள்ள அந்நாட்டு தூதர் நதிர் படேல் வியாழக்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள விருந்தினர்கள் பெயர் பட்டியலில் கனடாவில் வசித்துவருபவரும் ஜஸ்பால் அத்வாலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவர், கடந்த 1986-ஆம் ஆண்டில் கனடாவின் வான்கோவருக்கு வந்திருந்த பஞ்சாப் அமைச்சர் மல்கியத் சிங்கை கொலை செய்ய முயற்சி செய்ததற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்.
அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. எனினும், ஜஸ்பாலுக்கு இந்தியா வர விசா எப்படி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் அளித்த பதில்:
தங்கள் பக்கம் நிகழ்ந்த தவறு என்று கனடா அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, இரவு விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு விசா வழங்கப்பட்டது எப்படி என்று தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார் ரவீஷ் குமார்.
முன்னதாக, காலிஸ்தான் விவகாரத்தில் ஆதரவாக செயல்படக் கூடாது என்று ட்ரூடோவிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியிருந்தார். இந்தியாவில் மட்டும் அல்ல; உலகில் எங்கும் பிரிவினைவாத கோரிக்கைகளுக்கு கனடா செவி சாய்க்காது என்று அவரிடம் ட்ரூடோ உறுதி அளித்தார்.
இதனிடையே, தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் அத்வாலின் பெயர் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com