விபின் ராவத்தின் அரசியல் கருத்தால் சர்ச்சை: ராணுவம் விளக்கம்

வடகிழக்கு மாநிலங்களின் சூழல் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்த கருத்தில் அரசியல் கிடையாது என்று பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் சூழல் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்த கருத்தில் அரசியல் கிடையாது என்று பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.
அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐடியுஎஃப்)கட்சி குறித்து அவர் முன்வைத்த விமர்சனம் சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், இத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட விபின் ராவத், இந்தியாவுக்குள் மறைமுகப் போரை நடத்த அண்டை நாடுகள் திட்டமிடுகின்றன என்றார். அதாவது, சீனாவின் துணையுடன் இந்தியாவுக்குள் அசாதாரண சூழலை உருவாக்க பாகிஸ்தான் முயலுவதாக அவர் மறைமுகமாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் திட்டமிட்டு வங்கதேசத்திலிருந்து ஊடுருவி வரும் மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். அதனால் அங்கு முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் அஜ்மல் தலைமையிலான ஏஐடியுஎஃப் கட்சி பாஜகவை விட வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
விபின் ராவத்தின் இக்கருத்து விமர்சனங்களுக்கு வித்திட்டது. இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) கருத்து வெளியிட்டுள்ள அஜ்மல், ராணுவத் தலைமைத் தளபதி அரசியல் விமர்சனங்களை முன்வைப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவை விட பிற கட்சிகள் வேகமாக வளர்ந்து வருவதால் தலைமைத் தளபதிக்கு என்ன கவலை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ராணுவச் செய்தித் தொடர்புப் பிரிவு, தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்த கருத்தில் எந்த அரசியலும் இல்லை எனக் கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் சூழ்நிலை குறித்தே அவர் கருத்து தெரிவித்தார் என்றும் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com