ஹாதியா வழக்கு: கேரள உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுயவிருப்பதுடன் செய்துகொள்ளும் திருமணத்தை ரத்து செய்வதற்கு கேரள உயர் நீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளதா?
ஹாதியா வழக்கு: கேரள உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுயவிருப்பதுடன் செய்துகொள்ளும் திருமணத்தை ரத்து செய்வதற்கு கேரள உயர் நீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளதா? என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த ஹாதியா, மதம் மாற்றப்பட்டு, முஸ்லிம் இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் புகாரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை எழுப்பினர். அதற்கு ஹாதியாவின் தந்தை அசோகன் அளித்த பதில்: 
கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண்கள், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக அஞ்சுகிறேன். சில விசித்திரமான உண்மைகளின் அடிப்படையில், ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்யலாம் என்றார். 
நீதித் துறை விசாரணையில் இருந்து தப்புவதற்காக, திருமணம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அசோகனின வழக்குரைஞர் ஷியாம் திவான் கூறினார். அதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை, மார்ச் 8-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அகிலா(24) , சேலத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது, தன்னுடன் படித்த முஸ்லிம் தோழி மூலம், இஸ்லாம் மதத்தால் கவரப்பட்டு, அந்த மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் ஹாதியா என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ஷஃபீன் ஜகான் என்ற முஸ்லிம் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமணத்தை ரத்து செய்யக் கோரி, ஹாதியாவின் தந்தை அசோகன், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஹாதியாவை ஷஃபீன் ஜகான் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், இதன் பின்னணியில், சிரியாவில் இருந்து இயங்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஹாதியாவின் திருமணம் செல்லாது என்று அறிவித்ததுடன், கேரளத்தில் காதல் ஜிகாத் நடப்பது குறித்து விசாரணை நடத்துமாறும் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. மேலும், ஹாதியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 
இந்த உத்தரவை எதிர்த்து, ஹாதியாவின் கணவர் ஷஃபீன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதையடுத்து, ஹாதியாவை நேரில் அழைத்து விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது விருப்பபடி அவர் படிப்பைத் தொடரலாம் என்று கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் சேலம் வந்து படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
இதனிடயே, ஹாதியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நான் ஒரு முஸ்லிம். இந்த மதத்தையே பின்பற்ற விரும்புகிறேன்; ஷஃபீன் ஜகானின் மனைவியாகவே இருக்க விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com