58 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு மார்ச் 23-இல் தேர்தல்

ஆந்திரம், கேரளம் உள்பட 16 மாநிலங்களில் காலியாகவுள்ள 58 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வரும் மார்ச் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திரம், கேரளம் உள்பட 16 மாநிலங்களில் காலியாகவுள்ள 58 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வரும் மார்ச் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய மார்ச் 12-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 10 எம்.பி. இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில எம்எல்ஏக்களுக்கு மட்டுமே உள்ளதால், உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவிலான இடங்களை ஆளும் பாஜகவே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், ஜே.பி.நட்டா, தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதாவலே உள்பட 50-க்கும் மேற்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதைத் தவிர, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு தனது எம்.பி. பொறுப்பை ராஜிநாமா செய்ததால், அந்த இடமும் காலியாக உள்ளது. மாநிலங்களவையில் கருத்து சுதந்திரம் இல்லை எனக் குற்றம்சாட்டி அவர் அந்த முடிவை எடுத்தார்.
அதேபோன்று கேரளத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி. வீரேந்திர குமாரும் கடந்த டிசம்பர் மாதம் எம்.பி. பதவியை துறந்தார். இந்தச் சூழலில் காலியாக உள்ள 58 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில் மார்ச் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிகார், மகாராஷ்டிரத்தில் தலா 6 இடங்களுக்கும், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசத்தில் தலா 5 இடங்களுக்கும், கர்நாடகம், குஜராத்தில் தலா 4 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரம், ராஜஸ்தான், ஒடிஸா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா 3 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதைத்தவிர ஜார்க்கண்ட் (2), சத்தீஸ்கர், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் (தலா 1) ஆகிய மாநிலங்களில் இருந்தும் புதிய எம்.பி.க்கள் தேர்வாக உள்ளனர்.
16 மாநிலங்களில் 12-இல் பெரும்பான்மை பலத்துடனும், கூட்டணி ஆதரவுடனும் பாஜக ஆட்சியமைத்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே மாற்றுக் கட்சி அரசுகள் இருக்கின்றன. எனவே, 58 இடங்களில் கணிசமானவற்றை பாஜக கைப்பற்றும் எனத் தெரிகிறது.
மாநிலங்களவையில் 57 உறுப்பினர்களுடன்காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்து வந்தது. அதனை கடந்த டிசம்பரில் பாஜக (58 உறுப்பினர்கள்) முறியடித்தது. தற்போதைய சூழலில், மேலும் பல எம்.பி. இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், அதேநேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com