இந்தியா உள்பட 4 நாடுகளுக்கு எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம்: துர்க்மெனிஸ்தானில் தொடங்கியது

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய 4 நாடுகள் பயன்பெறும் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் துர்க்மெனிஸ்தானில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய 4 நாடுகள் பயன்பெறும் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் துர்க்மெனிஸ்தானில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
இந்தத் திட்டம், தெற்காசியாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இயற்கை எரிவாயு வளம் நிறைந்த துர்க்மெனிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள செர்கேதாபாத் என்ற இடத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
தொடக்க விழாவில் ஆப்கன் அதிபர் அஷரஃப் கனி, துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமே தோவ், பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர, துர்க்மெனிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர், பாகிஸ்தான் தூதர், ஆப்கன் தூதர் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி பேசுகையில், 'இந்த இயற்கை எரிவாயுக் குழாய் திட்டம் வெற்றி பெறாது என்று சிலர் கூறினார்; அவர்களின் கூற்றை பொய்யாக்கி, எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய 4 நாடுகளையும் ஒன்றிணைக்கிறது' என்றார்.
இந்தத் திட்டத்தின் படி, துர்க்மெனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு 1,840 கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயுக் குழாய் பதிக்கப்படுகிறது. வரும், 2020-ஆம் ஆண்டில் இருந்து இயற்கை எரிவாயு விநியோகம் தொடங்கி விடும்.
நான்கு நாடுகளுக்கும் ஆண்டொன்றுக்கு 3,300 கன மீட்டர் எரிவாயு விநியோகம் செய்யப்படும். அதில், இந்தியாவும், பாகிஸ்தானும் தலா 1,400 கன மீட்டர் அளவுக்கும், எஞ்சியுள்ள 500 கன மீட்டர் எரிவாயுவை ஆப்கானிஸ்தானும் பங்கிட்டுக் கொள்ளும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com