இந்தியாவின் ஒற்றுமைக்குச் சவால் விடுவோரை சகித்துக் கொள்ள முடியாது: கனடா பிரதமரைச் சந்தித்த பின் பிரதமர் மோடி திட்டவட்டம்

இந்தியாவின் ஒற்றுமைக்குச் சவால் விடுவோரை சகித்துக் கொள்ள முடியாது' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கருத்து கூறினார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இந்தியாவின் ஒற்றுமைக்குச் சவால் விடுவோரை சகித்துக் கொள்ள முடியாது' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கருத்து கூறினார். இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த விரும்பும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் விவகாரத்தில் கனடா மென்மையான போக்கைக் கொண்டிருப்பதை மறைமுகமாகக் கண்டிக்கும் வகையிலேயே மோடி இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சுற்றுப் பயணத்தின் நிறைவாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்தார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் இரண்டு மணி நேரம் விவாதித்தனர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன் பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:
இரு தரப்பு உறவுகள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அடையாளம் கண்டோம். பயங்கரவாதமும் தீவிரவாதமும் இந்தியா, கனடா போன்ற ஜனநாயக நாடுகளுக்கு அச்சுதறுத்தலாக இருப்பதை இருவரும் சுட்டிக் காட்டினோம்.
இருதரப்பு தாராள வர்த்தக உடன்பாட்டை இறுதிசெய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு எங்கள் நாட்டு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொண்டோம். 
இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட இணைந்து பாடுபடுவது அவசியம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட ட்ரூடோவும் நானும் ஒப்புக் கொண்டோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் ஒத்துழைப்பது தொடர்பான செயல்திட்டத்துக்கு இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களும் இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வருகை புரிந்துள்ளார். அதன் மூலம் கனடா தொடர்பாக இந்தியாவில் காணப்படும் ஆர்வத்தையும், நமது நட்பையும் அவர் புரிந்து கொண்டிருக்கக் கூடும். அதேபோல் அவர் நம் நாட்டின் பன்முகத் தன்மையையும், நமது ஜனநாயகத்தின் சிறப்பையும் கண்டு உணர்ந்திருக்கக் கூடும்.
மத நம்பிக்கைகளை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவோருக்கும், பிரிவினையை விதைப்பவர்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மேலும், நமது நாடுகளின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு சவால் விடுப்பவர்களை சகித்துக் கொள்ள முடியாது.
கனடாவுடனான உத்திசார்ந்த தோழமையை மேலும் வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. ஏனெனில் இரு நாடுகளும் ஜனநாயகம், பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. 
இரு தரப்பும் எரிசக்தி, திறன் மேம்பாடு, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்துள்ளன என்றார் மோடி.
ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வர்த்தக ஒத்துழைப்பில் இயல்பான தோழமை நாடாக கனடா உள்ளது' என்றார்.
இதனிடையே, ஜஸ்டின் ட்ரூடோவை தில்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு நலன்சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்ததாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.
இந்தியா புறக்கணித்ததா?: முன்னதாக, ஜஸ்டின் ட்ரூடோ ஒரு வார கால பயணமாக கடந்த 17-ஆம் தேதி இந்தியா வந்தார். அவரை தில்லி விமான நிலையத்தில் மத்திய வேளாண் துறை இணையமைச்சர் கஜேந்திர சிங்கும், கனடாவுக்கான இந்தியத் தூதர் விகாஸ் ஸ்வரூப்பும் வரவேற்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி தில்லி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற நிலையில், கனடா பிரதமரை இணையமைச்சர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் வரவேற்றது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. அதேபோல், ஜஸ்டின் ட்ரூடோ குஜராத்துக்கு சென்றபோது அவரை அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி வரவேற்கவில்லை. மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சரே வரவேற்றார். 
கனடா பிரதமர் உத்தரப் பிரதேசம் சென்றபோது அவரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்கவில்லை. அதேபோல் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களை ட்ரூடோ பார்வையிட்டபோதும் ஆதித்யநாத் உடன் செல்லவில்லை.
இந்த விவகாரம் கனடா ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. ஜஸ்டின் ட்ரூடோவை இந்தியா அவமதிப்பதாகவும், மட்டம் தட்டுவதாகவும் அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். 
இந்தியாவின் இத்தகைய நிலைப்பாட்டுக்கு காலிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சீக்கியர்கள் சிலருக்கு கனடா பிரதமர் தனது அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பதே காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. 
எனினும், கனடா பிரதமருக்கு எந்த அவமதிப்பும் இழைக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியது.
கனடா அரசின் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் ஏற்கெனவே விமர்சித்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோவை கடந்த புதன்கிழமை சந்தித்தபோது இந்த விவகாரத்தை அமரீந்தர் சிங் எழுப்பினார். அப்போது, இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ பிரிவினைவாதத்தைத் தூண்டும் செயலில் கனடா ஈடுபடாது என்று ட்ரூடோ உறுதியளித்தார்.
சீக்கிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக செயல்பட இந்தியா-கனடா முடிவு பப்பர் கல்ஸா, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு போன்ற சீக்கிய பயங்கரவாத அமைப்புகளுக்கும், லஷகர் -ஏ-தொய்பா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக இணைந்து பாடுபட இந்தியாவும், கனடாவும் தீர்மானித்துள்ளன. இந்தத் தகவல், இரு நாட்டுப் பிரதமர்களின் விரிவான பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியிடப்பட்ட 'பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புச் செயல்திட்டம்' என்ற ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பப்பர் கல்ஸா பயங்கரவாத அமைப்பானது கனடா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இயங்கி வருகிறது. சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பானது இந்தியாவில் உள்ள சீக்கியர்களுக்கு என்று தனிநாட்டை உருவாக்கும் பிரிவினைவாத நோக்கத்துடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தில்லியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com