உ.பி. முதலீட்டாளர்கள் மாநாடு: லக்னெளவைப் பொலிவுபடுத்த ரூ.65 கோடி!

உத்தரப் பிரதேச அரசு நடத்திய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்காக அந்த மாநிலத் தலைநகர் லக்னெள ரூ.65 கோடி செலவில் பொலிவுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச அரசு நடத்திய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்காக அந்த மாநிலத் தலைநகர் லக்னெள ரூ.65 கோடி செலவில் பொலிவுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாலை அமைத்தது, பதாகைகள் நிறுவியது, வண்ண விளக்குகளால் நகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது என பல்வேறு பணிகள் அந்தத் தொகையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. அதில் 10 நாடுகளைச் சேர்ந்த 110 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் மாநில தொழிலதிபர்கள், அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற அந்த மாநாட்டில் மொத்தமாக 6,000 பேர் பங்கெடுத்ததாகவும், அதன் வாயிலாக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு உத்தரவாதங்கள் பெறப்பட்டதாகவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக 1,045 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
முன்னதாக, வெளிநாட்டு பிரதிநிதிகளின் போக்குவரத்துக்காக 22 விமானங்களும், அவர்கள் தங்குவதற்காக 12 சொகுசு ஹோட்டல்களில் 300 அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. இதைத் தவிர லக்னெள நகர் முழுவதும் உள்ள சாலைகள் செப்பனிடப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் மட்டுமன்றி அனைத்துப் பகுதிகளிலும் விளம்பரப் பதாகைகளும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளின் ஒளியில் நகரமே மிளிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
லக்னெளவை பொலிவுபடுத்தும் பணிகளுக்கு மட்டும் மாநில அரசு ரூ.65 கோடி செலவிட்டதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில், மாநகராட்சி சார்பில் ரூ.24.25 கோடியும், லக்னெள மேம்பாட்டு அமைப்பு சார்பில் ரூ.12.55 கோடியும் செலவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com