காந்தியை விமர்சித்து பதிவு: திரிணமூல் எம்.பி.க்கு கட்சித் தலைமை நோட்டீஸ்

மகாத்மா காந்தியை விமர்சிக்கும் வகையில் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அனுபம் ஹஸ்ராவுக்கு அக்கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாத்மா காந்தியை விமர்சிக்கும் வகையில் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அனுபம் ஹஸ்ராவுக்கு அக்கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரது பதில் ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் ஹஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மேற்கு வங்க மாநிலம், போல்பூர் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஹஸ்ரா. முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) போன்ற சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள், கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், மகாத்மா காந்தி தேசத் தந்தையாகப் போற்றப்படுவதை விமர்சித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சைகளுக்கு வித்திட்டதுடன், கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீதும் விமர்சனங்களை முன்வைக்கக் காரணமாக அமைந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஹஸ்ராவிடம் திரிணமூல் காங்கிரஸ் கேட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது:
சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று பல முறை ஹஸ்ராவிடம் வலியுறுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும், அவர் அத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com