கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி- ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜாமீன்கோரி தாக்கல் செய்திருந்த
கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி- ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜாமீன்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
தேவ்கர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சத்தை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் லாலு பிரசாத் தனக்கு ஜாமீன் கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அபரேஷ் குமார் சிங் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறுகையில், 'ஊழல் நடைபெற்ற காலத்தில் பிகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். மாநில நிதியமைச்சராகவும் அவர்தான் இருந்தார். இந்த விவகாரம் தொடர்பான கோப்புகளை, பொது கணக்குக் குழு பல ஆண்டுகளாக தன்னிடத்தில் வைத்திருந்தது. அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாலு பிரசாத் யாதவுக்கு தெரிந்துதான், அனைத்து ஊழல்களும் நடந்துள்ளன. ஆதலால், லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் அளிக்க முடியாது' என்றார்.
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக 5 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று, தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு ஆகும்.
இதுதவிர, மேலும் 3 வழக்குகளில் லாலுவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 2 வழக்குகள், சாய்பாசா கருவூலம் தொடர்புடையவை. அந்த 2 வழக்குகளில், முதலாவது வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் லாலுவுக்கு கடந்த ஜனவரி மாதம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடி, தோரண்டா கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளும், லாலுவுக்கு எதிராக நடைபெற்று வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com