நிதி மோசடியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : பிஎன்பி விவகாரத்தில் பிரதமர் உறுதி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.11,400 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்துள்ள பிரதமர் மோடி, நிதி மோசடியாளர்களுக்கு எதிராக தனது
நிதி மோசடியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : பிஎன்பி விவகாரத்தில் பிரதமர் உறுதி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.11,400 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்துள்ள பிரதமர் மோடி, நிதி மோசடியாளர்களுக்கு எதிராக தனது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது தொழில்பங்குதாரரும் உறவினருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த விவகாரம் அண்மையில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளில் நிகழ்ந்த மோசடிகளிலேயே இரண்டாவது பெரிய மோசடியாக இது கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், 'எக்னாமிக் டைம்ஸ்' ஆங்கில நாளிதழ் சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
நிதி முறைகேடுகளுக்கு எதிராக எனது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை இத்தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பொதுமக்களின் பணத்தை யாரும் கொள்ளையடிப்பதை சகித்துக் கொள்ள முடியாது.
வேண்டுகோள்: நிதி நிறுவனங்களில் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கக் கூடிய இடத்தில் இருப்போர், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். தங்களது பணியில் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இதேபோல், நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உள்ளவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான், நிதி மோசடிகளைத் தடுக்க முடியும் (எனினும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பெயரையோ, தொழிலதிபர் நீரவ் மோடியின் பெயரையோ மோடி நேரடியாக குறிப்பிடவில்லை). 
பொருளாதாரக் கொள்கைகள்: நாட்டு மக்களின் மேம்பாட்டை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிக விலை கிடைக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். பல்வேறு நிலைகளிலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது. பழைய நடைமுறைகளை திருத்தியதும், பணியாற்றும் பாணியை மாற்றியதுமே இதற்கு காரணம்.
சரக்கு, சேவை வரி: சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம், வரி வருவாய் பெருக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. இப்போது ஜிஎஸ்டியின் கீழ் சுமார் 1 கோடி நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com