சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாடச்சுமை குறைகிறது: மத்திய அரசு புதிய திட்டம்

வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடச்சுமையை மத்திய அரசு பாதியாகக் குறைக்கவுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடச்சுமையை மத்திய அரசு பாதியாகக் குறைக்கவுள்ளது.
 என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரிக்கும் பாடப் புத்தகங்கள், சிபிஎஸ்இ பள்ளிகளிலும், ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,
 அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாடச் சுமையை பாதியாகக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 "ராஜ்ய சபா' தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 பி.ஏ., பி.காம். போன்ற பட்டப் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தை விட பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டம் அதிகமாக உள்ளது. மாணவர்கள் மற்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமெனில், அவர்களுக்கு சுதந்திரமும், நேரமும் அளிக்கப்பட வேண்டும். அதற்காக, மாணவர்களின் பாடச்சுமையை பாதியாகக் குறைக்க வேண்டும் என்று என்சிஇஆர்டி-யை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வரும் (2019) கல்வியாண்டு முதல், சிபிஎஸ்இ மாணவர்களின் பாடச்சுமை பாதியாகக் குறையும்.
 பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் தேர்வு முறையும், தேர்ச்சி பெறாத மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைக்கும் முறையும் அறிமுகப்படுத்தபடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு மாணவர் மார்ச் மாதம் நடத்தப்படும் பொதுத் தேர்வில், தேர்ச்சி பெறாவிடில், மே மாதம் அவருக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும். அந்த தேர்விலும் அவர் தோல்வியடைந்தால் மட்டுமே அதே வகுப்பில் நிறுத்தி வைக்கப்படுவார்.
 கல்வி உரிமைச் சட்டப்படி, 2015-ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 லட்சம் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடிந்தது. தற்போது, 14 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 புதிய கல்விக் கொள்கை தொடர்பான மசோதா, அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com