பிஎன்பி ஊழல் குறித்து ரிசர்வ் வங்கி முழு விசாரணை நடத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நடந்துள்ள ரூ.11,400 கோடி ஊழல் குறித்து, ரிசர்வ் வங்கி முழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நடந்துள்ள ரூ.11,400 கோடி ஊழல் குறித்து, ரிசர்வ் வங்கி முழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 வங்கிகளில் நடந்துள்ள முறைகேடுகள் மூலமாக, நாட்டுக்கு இதுவரை ரூ.21,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் ரூ.390 கோடி ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபோல், மேலும் பல முறைகேடுகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரவுள்ளன.
 அதிக செலவு செய்யும் நமது நாட்டின் பிரதமர், நாட்டின் பாதுகாவலராக இருக்கும் நிலையில், இதுபோன்ற வங்கி முறைகேடுகள் எப்படி நடக்கின்றன? என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. வங்கி அமைப்பு குறித்து சந்தேகம் ஏற்படும்பட்சத்தில், அது நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்; முதலீட்டையும் பாதிக்கும்.
 இந்த விவகாரத்தில், மோடி ஏன் மௌனமாக உள்ளார்? வங்கிகளில் முறைகேடுகள் செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறிய நபர்கள், மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று மோடி நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். இத்தகைய நபர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் விவகாரத்தை மக்களின் முடிவுக்கு விட்டுவிடுவோம். அதேநேரத்தில், வங்கிகளில் முறைகேடு செய்தோரை நமது நாட்டை விட்டு வெளியேற ஏன் அரசு அனுமதித்தது? என்பதை முதலில் அரிய விரும்புகிறோம்.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழலை 2ஜி ஊழல் என்று அழைக்கிறோம். அதுபோல், இந்த ஊழலை (பிஎன்பி ஊழல்) நாங்கள் இனிமேல் நிமோஜி என்று அழைக்க போகிறோம். பிரதமர் நமது நாட்டுக்கு வாக்குறுதி அளிக்காத வரையிலும், வங்கியில் முறைகேடுகள் செய்யும் நபர்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது என்றுதான் மக்கள் நினைப்பார்கள். இந்த விவகாரம் (பிஎன்பி ஊழல்) குறித்து ரிசர்வ் வங்கி முழு விசாரணை நடத்த விரைவில் உத்தரவிடப்பட வேண்டும்.
 வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக 4 கோரிக்கைகளை பிரதமருக்கு காங்கிரஸ் விடுக்கிறது. இதில் முதல் கோரிக்கையானது, கோர் பேங்கிங் அமைப்புடன் அனைத்து வங்கிகளின் தகவல் தொடர்பு வசதி 30 நாள்களில் ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்பதாகும். கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை வங்கிகள் ஆய்வு செய்துள்ளனவா? முறையாக பரிவர்த்தனைகள் நடந்துள்ளனவா? முறைகேடுகள் நடந்திருப்பது எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனவா? என்பது தொடர்பான பணிகளை 30 நாள்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்.
 நிதி மோசடிகள் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, மோசடிகள் நடக்கும் வங்கிகளின் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இருக்கும் பொறுப்புகள், 60 நாள்களில் நிர்ணயிக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றார் கபில் சிபல்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com