ஸ்ரீதேவி மரணத்திலும் அரசியல்: சர்ச்சையினைக் கிளப்பிய காங்கிரஸ் கட்சியின் ட்வீட்! 

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான இரங்கல் ட்வீட்டிலும் அரசியல் கணக்குகள் குறித்தான காங்கிரஸ் கட்சியின் பார்வை கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
ஸ்ரீதேவி மரணத்திலும் அரசியல்: சர்ச்சையினைக் கிளப்பிய காங்கிரஸ் கட்சியின் ட்வீட்! 

மும்பை: நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான இரங்கல் ட்வீட்டிலும் அரசியல் கணக்குகள் குறித்தான காங்கிரஸ் கட்சியின் பார்வை கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

சிவகாசியில் பிறந்து, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் மற்றும் பாலிவுட் என இந்தியத் திரையில் உச்சத்தை தொட்டவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது மறைவுக்கு இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

உறவினர் திருமணம் ஒன்றுக்காக துபை சென்று இருந்த அவர் சனிக்கிழமை இரவு (பிப் 24,2018) 11.30 மணி அளவில் ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் பூத உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது செய்யப்பட்டு வருகின்றன. தற்போது துபையில் மருத்துவ நடைமுறைகள் முடிந்து தலைமை காவல் அலுவலகத்திற்கு ஸ்ரீதேவியின் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது. 

ஸ்ரீதேவியின் உடலை துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அனுமதி கிடைத்தவுடன் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட உள்ளதாகவும் இன்று இரவு 8 மணிக்கு மும்பை கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழ்,இந்தி நடிகர், நடிகைகள் பலர் ட்விட்டர் தளத்திலும், முகநூலிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அவரின் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டு இருந்தது.

அதில், “ நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சி மிகுந்த வேதனை அடைகிறது. மிகச்சிறந்த நடிகை, திறமையானவர்.அவரின் படைப்புகளும், நடிப்பும் காலத்துக்கும் ரசிகர்கள் மனதில் நீங்காதிருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். கடந்த 2013ம்ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடிகை ஸ்ரீதேவிக்கு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அளித்து கவுரவித்தது” எனத் தெரிவித்து இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த ட்விட்டர் பதிவு பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் சாவிலும் அரசியல் கணக்குகளை நேர் செய்வதுதான் பண்பா என்று காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பரவலான கண்டங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட அந்த சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com