ஒரு மாதத்துக்கும் மேலாக தலைவர் இல்லாமல் இயங்கிவரும் சிஐஎஸ்எஃப்

விமான நிலையங்கள், மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், விண்வெளி மையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில்

விமான நிலையங்கள், மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், விண்வெளி மையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அமைப்பு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இயங்கி வருகிறது.
 அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஓ.பி.சிங், உத்தரப் பிரதேச காவல் துறை தலைவராக கடந்த மாதம் 22-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அப்போது முதல் நிரந்தரத் தலைவர் இல்லாமல் சிஐஎஸ்எஃப் செயல்பட்டு வருகிறது.
 இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், உத்தரப் பிரதேச காவல் துறை முன்னாள் தலைவருமான பிரகாஷ் சிங் கூறியதாவது:
 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிஐஎஸ்எஃப் அமைப்புக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்காமல் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
 முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் மட்டுமல்ல; பொதுவாகவே சிஐஎஸ்எஃப் நிரந்தரத் தலைவர் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. உரிய தகுதிகளுடன் கூடிய பல ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கின்ற போதிலும், அந்த அமைப்புக்கு நிரந்தரத் தலைவரை நியமிப்பதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்றார் பிரகாஷ் சிங்.
 "சிஐஎஸ்எஃப் அமைப்புக்கு நிரந்தரத் தலைவரை நியமிப்பதற்குத் தேவையான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன' என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 சிஐஎஸ்எஃப் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
 மிகவும் முக்கியமான அமைப்பான சிஐஎஸ்எஃப் படைக்கு தலைவர் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடந்த ஆண்டில் சுமார் 2 மாதங்கள் தலைவர் பதவி இல்லாமல் இயங்கி வந்தது. அப்போது, சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பிறகு, உடனடியாக அந்த அமைப்பின் தலைவராக ஆர்.ஆர்.பட்நாகர் நியமிக்கப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 சிஐஎஸ்எஃ தலைவர் பதவியை அந்த அமைப்பின் கூடுதல் டி.ஜி.யான ஏ.கே.படேரியா தற்போது கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com