காவல்துறைகளில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்: அரசு புள்ளிவிவரத் தகவல்

நாடு முழுவதும் காவல்துறைகளில் பணிபுரிவோரில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் காவல்துறைகளில் பணிபுரிவோரில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2015-இல் 3 லட்சத்து 29 ஆயிரத்து 243 ஆக இருந்த இக்குற்றங்கள், 2016-இல் 3 லட்சத்து 38 ஆயிரத்து 954-ஆக அதிகரித்தன.
 இந்நிலையில், காவல்துறைகளின் ஊழியர் பலம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களில் தெரிய வரும் விவரங்கள் வருமாறு:
 நாடு முழுவதும் காவல்துறைகளில் பணிபுரிவோரில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.
 பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையில் பணிபுரிவோரில் வெறும் 3.05 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். அங்கு காவல்துறையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிõய அனுமதிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, தெலங்கானா காவல்துறையில் பணிபுரிவோரில் 2.47 சதவீதம் பேர் பெண்கள். அங்கு காவல்துறையில் மொத்தம் 60,700 பேர் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.
 நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையில் பணிபுரிவோரில் 3.81 பேர் பெண்களாவர்.
 அதேபோல் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேகாலயம் ஆகிய மாநிலங்களிலும் பெண் போலீஸாரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
 தமிழ்நாட்டில்தான் நாட்டிலேயே அதிக அளவில் பெண் போலீஸார் பணிபுரிகின்றனர். ஹிமாசலப் பிரதேசம், மாகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களிலும் கணிசமான அளவில் பெண் போலீஸார் பணியாற்றுகின்றனர்.
 யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை சண்டீகரில் அதிக எண்ணிக்கையில் பெண் போலீஸார் பணிபுரிகின்றனர். தில்லியில் காவல்துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் எண்ணிக்கை 85,000. அங்கு பணிபுரியும் பெண் காவலர்களின் எண்ணிக்கை 8.64 சதவீதம் என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
 இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் "பெண் போலீஸாரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக அதிகரிக்குமாறு மத்திய அரசு கடந்த 2009, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அறிவுரைகளை அனுப்பியது. அப்படி இருந்தும் நிலைமையில் முன்னேற்றமில்லை' என்றார்.
 உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறுகையில், துணை ராணுவப்படைகளிலும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com