பெரு நிறுவனங்களின் வளர்ச்சியில் மட்டுமே மோடிக்கு அக்கறை

பெரு நிறுவனங்களின் வளர்ச்சியில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
பெரு நிறுவனங்களின் வளர்ச்சியில் மட்டுமே மோடிக்கு அக்கறை

பெரு நிறுவனங்களின் வளர்ச்சியில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
 கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், சிக்கபதசலகி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:
 கர்நாடகத்தின் தலைசிறந்த சமூக சீர்த்திருத்தவாதி தனது வசனங்கள் மூலம் சமுதாயத்தை பண்படுத்த முயற்சித்தார். செய்யும் வேலையை திறம்பட செய்ய வேண்டும் என்று கூறிய பசவண்ணர், சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 ஆனால், பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதுவும் செயல்படுத்தவில்லை. பசவண்ணரின் வழியில் அவர் ஆட்சி நடத்த தவறிவிட்டார். ஆனால், கர்நாடகத்தை ஆட்சி செய்யும் முதல்வர் சித்தராமையா, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். பசவண்ணர் வழியில் சித்தராமையா ஆட்சி நடத்தினார்.
 கர்நாடகம்தான் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. குஜராத்தில் உயர்கல்வி பயில வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகும். ஆனால், கர்நாடகத்தில் பெண்கள் முதுநிலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க காங்கிரஸ் அரசு திட்டம் வகுத்துள்ளது.
 ஒருமுறை பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது, கடுமையான இன்னலை சந்தித்துவரும் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் சாதகமாக பதிலளிக்கவில்லை. ஆனால், கர்நாடகத்தில் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய கேட்டதும் அதை உடனடியாக செயல்படுத்தியவர் முதல்வர் சித்தராமையா.
 விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி, பெரு நிறுவனங்கள், தொழிலதிபர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளார். பெரு நிறுவனங்களின் வளர்ச்சியில் மட்டுமே பிரதமர் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
 சிறு வியாபாரிகள், ஏழைகள், விவசாயிகள், நலிவடைந்தோர் குறித்து பிரதமருக்கு அக்கறையில்லை. கர்நாடகத்தில் பட்டினியைப் போக்குவதற்காக இலவச அரிசி திட்டத்தை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியுள்ளது. இலவச அரிசி திட்டம் மட்டுமல்ல இலவச பால் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வர் சித்தராமையா செயல்படுத்தியுள்ளார்.
 கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக சொன்ன பிரதமர் மோடி, அதை செயல்படுத்தினாரா? சித்தராமையா அரசு சொன்னபடி ஆட்சியை நடத்தியுள்ளது. எனவே, கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள் என்றார்.
 கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஜி.பரமேஸ்வர், மேலிடப்பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com