மாநிலங்களவைத் தேர்தல்: எம்எல்ஏக்களை விலை பேசியதாக தெலுங்கு தேசம் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆந்திரத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி விலை பேசியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஆந்திரத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி விலை பேசியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது.
 இந்நிலையில், அங்கு வரும் மார்ச் 23-ஆம் தேதி 3 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போதுள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கைப்படி தெலுங்கு தேசம் இரு எம்.பி.க்களையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
 ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்த 44 எம்எல்ஏக்களில் 22 பேர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துவிட்டனர்.
 இந்நிலையில், அமராவதியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. வி.விஜயசாய் ரெட்டி கூறியதாவது:
 சட்டப் பேரவையில் இப்போது கட்சிகளுக்கு உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின்படி பார்த்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. கிடைக்க வேண்டும். ஆனால், 3 இடங்களிலும் தாங்களே வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி, எங்கள் எம்எல்ஏக்களிடம் அவர்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு விலை பேசியுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் தொடர்ந்து பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது திட்டமாக உள்ளது என்றார்.
 அதே நேரத்தில், "எங்கள் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் 3-ஆவது வேட்பாளர் நிறுத்தப்பட மாட்டார். இரு இடங்களில் மட்டுமே நாங்கள் வெற்றி பெறுவோம். 3-ஆவது வேட்பாளரை நாங்கள் நிறுத்த இருப்பதாகக் கூறுவதும் எதிர்க்கட்சியின் அச்சத்தையே வெளிக்காட்டுகிறது' என்று தெலுங்கு தேசம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com