ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு நீட்டித்து உத்தரவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு நீட்டித்து உத்தரவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளது. இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கைச் சேர்ந்த ஆசிஸ் பதான் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
 அந்த மனுவில் அவர், "தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களினால், நாசிக் பகுதி மக்களுக்கு மட்டும் ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைக்கும் பணி தாமதமாகி வருகிறது; ஆதலால், ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் மாதம் 31ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நாசிக் பகுதி மக்களுக்கு மட்டும் நீட்டித்து உத்தரவிட வேண்டும்.
 மேலும், மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைக்காத நாசிக் பகுதி மக்களுக்கு, பொதுவிநியோகத் திட்ட பயன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
 இந்த மனு, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சாந்தனு கெம்கர், ராஜேஷ் கேட்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 அப்போது நீதிபதிகள் கூறுகையில், "ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நாசிக் பகுதி மக்களுக்கு மட்டும் நீட்டித்து உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
 மகாராஷ்டிரத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதாரை இணைக்கும் தொழில்நுட்பத்தில் நிலவும் குறைபாடுகளை ஒரு வாரத்துக்குள் சரி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
 இதையடுத்து, மனுதாரரான ஆசிஸ் பதானை மாநில அரசை அணுகி, அவரது பிரச்னைக்கு தீர்வு காணும்படியும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com