பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடி: விசாரணைக்கு இந்தியா திரும்ப நீரவ் மோடி மறுப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற பண மோசடி தொடர்பான விசாரணையில் பங்குபெற இந்தியா திரும்ப முடியாது என்று நீரவ் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடி: விசாரணைக்கு இந்தியா திரும்ப நீரவ் மோடி மறுப்பு!

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற பண மோசடி தொடர்பான விசாரணையில் பங்குபெற இந்தியா திரும்ப முடியாது என்று நீரவ் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது கடந்த 14-ஆம் தேதி கண்டறியப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி  நிரவ் மோடியின் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக சி.பி.ஐ.யிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சிபிஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் நிரவ் மோடியின் நிறுவன அலுவலர்கள் மூவரையும் கைது செய்துள்ளது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்திலேயே நிரவ் மோடி வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய விசாரணை முகமைகள் மூலம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து சிறப்பு புலனய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாம்பே பங்கு வர்த்தக நிறுவனத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் திங்களன்று இரவு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இத்தனையும் சேர்த்து நிரவ் மோடி மொத்தமாக ரூ. 12723 கோடி பணத்தினை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இதன் எதிரொலியாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகளின் விலையானது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற பண மோசடி தொடர்பான விசாரணையில் பங்குபெற இந்தியா திரும்ப முடியாது என்று நீரவ் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பண மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்ஷிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. வெளிநாட்டில் இருப்பதால் இ-மெயில் மூலமாக நிரவ் மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் தனக்கு வெளிநாட்டில் தொழில் தொடர்பான பணிகள் உள்ளது என காரணம் காட்டி விசாரணையில் பங்குபெற முடியாது என்று நிரவ் மோடி மறுத்துவிட்டார் என தற்பொழுது சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இது தொடர்பாக இந்திய தூதகரத்தை அணுகி சட்டப்பூர்வ முயற்சிகளை எடுக்குமாறு சிபிஐக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com