அரசியல் கட்சிகள் நன்கொடைக்கு 'தேர்தல் பத்திரங்கள்': புதிய திட்டம் பற்றி ஜேட்லி தகவல்

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
வங்கிகள் மூலம் நன்கொடை: இது தொடர்பாக அருண் ஜேட்லி மேலும் கூறியதாவது:
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும் குறிப்பிட்ட சில பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கிடைக்கும் இந்த தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் வங்கிகள் வழியாகவே நன்கொடை அளிக்க முடியும். பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகை, அதில் குறிப்பிட்டுள்ள அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
15 நாள்கள் மட்டுமே செல்லும்: அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதற்கு மாற்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 10 நாள்களுக்கு மட்டுமே இந்தப் பத்திரங்கள் கிடைக்கும். பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டில் மாதத்தில் 30 நாள்களுக்கு இந்தப் பத்திரங்களை வாங்க முடியும். பத்திரத்தை வாங்கிய 15 நாள்கள் மட்டும் செல்லுபடியாகும். அதன் பிறகு காலாவதியாகிவிடும். ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி ஆகியவற்றின் மடங்குகளில் இந்தப் பத்திரங்களைப் பெறலாம்.
பெயர் இடம்பெறாது: வங்கி விதிகளின்படி வாடிக்கையாளர் விவரங்களை அளித்த பிறகு இந்தப் பத்திரங்களை வாங்க முடியும். ஆனால், பத்திரத்தில் வாங்கியவரின் பெயர் இடம்பெறாது. கடந்த 2017-18-ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போதே இந்த தேர்தல் நிதிப் பத்திரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது அத்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து அறிவித்துள்ளோம் என்றார் அவர்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்படுவதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிமுகமாகிறது. இப்போது அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடை அனைத்தும் ரொக்கமாகவே வழங்கப்படுகிறது.
காங்கிரஸ் கேள்வி: அருண் ஜேட்லியின் அறிவிப்பு குறித்து உடனடியாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'நன்கொடை அளிப்பவர்களின் பெயர் இடம்பெறாமல் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வழங்கப்படுவது ஏன்?' என்றார்.
இதற்கு பதிலளித்த ஜேட்லி, 'நன்கொடை அளித்தவரின் வங்கிக் கணக்கில் இந்த விவரங்கள் இடம்பெறும். எனவே, கருப்புப் பணம் நன்கொடையாக வர வாய்ப்பில்லை' என்று பதிலளித்தார்.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு பெருமளவில் நன்கொடை நிதி கிடைக்கிறது. ஆனால், அவை எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. இப்போது தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பது முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களும், இந்திய நிறுவனங்களும் மட்டுமே பத்திரங்களை வாங்க முடியும். கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஒரு சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மட்டுமே பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற முடியும்' என்றும் கூறினார்.
வாராக்கடன் விவகாரம்: வங்கிகளின் வாராக்கடன் சுமை அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்து ஜேட்லி கூறியதாவது:
'கடந்த 2014 ஏப்ரலுக்கு முன்பு (காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக் காலத்தில்) வங்கிகள் உரிய முன்னெச்சரிக்கை ஏதுமின்றி அதிக அளவில் கடன்களை வழங்கியுள்ளன. எவ்வித காப்புறுதியும் இல்லாமல் கோடிக்கணக்கிலான தொகை கடனாக வெளியே சென்றுள்ளது. இதில் எந்த வங்கிக் கடனையும் இப்போதைய அரசு தள்ளுபடி செய்யவில்லை. கடன் வாங்கியவர்களுக்கு அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு இப்போதும் உள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் கடந்த 2014 மார்ச் 31-ஆம் தேதி ரூ.2.16 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்த வாராக்கடன் தொகை ரூ.7.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் 1 லட்சத்து 86 ஆயிரத்து 115 கோடியாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் ரூ.57,630 கோடியாகவும், பாங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் ரூ.49,307 கோடியாக உள்ளது.
பிட்காயின் போன்ற கரன்சிகளுக்கு எவ்வித சட்டப் பாதுகாப்பும் கிடையாது. பிட்காயின் பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் அதில் ஏற்படும் பிரச்னைகளை அவர்கள்தான் எதிர்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைக் குவித்துள்ள இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.
ஒரே விகித ஜிஎஸ்டி கிடையாது
தொடர்ந்து, அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே விகிதத்தில் ஜிஎஸ்டி விதிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 'சில நாடுகளில் அனைத்து விதமான பொருள்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் உள்ளது. ஆனால் அந்த நாடுகளில் அனைத்து மக்களும் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளனர். இந்தியாவில் உணவு உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு மிகக்குறைந்த ஜிஎஸ்டியும், ஆடம்பரப் பொருள்களுக்கு அதிக ஜிஎஸ்டியும் விதிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தியாவில் அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் என்ற கேள்விக்கே இடமில்லை. அதே நேரத்தில் ஜிஎஸ்டி வரியை நெறிமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com