உணவு, ஊதியமின்றி குவைத்தில் தவிக்கும் 2,000 இந்தியர்கள்: உதவுவாரா சுஷ்மா சுவராஜ்?

உண்ண உணவும், படுக்க போர்வையும் கூட இல்லாமல் சுமார் 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் குவைத்தில் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உணவு, ஊதியமின்றி குவைத்தில் தவிக்கும் 2,000 இந்தியர்கள்: உதவுவாரா சுஷ்மா சுவராஜ்?


உண்ண உணவும், படுக்க போர்வையும் கூட இல்லாமல் சுமார் 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் குவைத்தில் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுமார் ஓராண்டுக்கும் மேலாக ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் இந்தியத் தொழிலாளர்கள் பலரும் தாய்நாடு திரும்ப முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன வேதனை அடைந்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குறிப்பாக குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தெலங்கான ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

கராஃபி நேஷனல் என்ற கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய தொழிலாளர்களின் விசாக்களின் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், அதனை நிர்வாகம் சரி செய்யும் என்று எதிர்பார்த்திருந்தது வீண் போனது. 

இதன் காரணமாக, தங்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் கூட மருத்துவமனைக்குப் போக முடியாத நிலையில் உள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் போது, தாங்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கராஃபி நேஷேனல் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் பலரும், நிறுவனத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது நிலுவை ஊதியத்தை அளித்து, மீண்டும் இந்தியா அனுப்பிவிடுமாறு அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

என்னால் தற்கொலை செய்து கொள்வது ஒன்றை மட்டுமே சிந்திக்க முடிகிறது. எனக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதில்லாமல் சட்டவிரோதமாக இங்கே தங்கியுள்ளேன். இந்தியாவுக்குச் சென்றால் பல ஆயிரக்கணக்கில் கடனை திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் உள்ளேன் என்கிறார் ஒரு தொழிலாளி.

இந்திய தொழிலாளர்கள் ஊதியத்தைக் கேட்கும் போது, தற்போது கைவசம் எந்த கட்டுமான வேலையும் இல்லாததால், ஊதியம் வழங்கும் நிலையில் நிறுவனம் இல்லை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

தினந்தோறும் நிறுவனத்துக்குச் சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்றால் போக்குவரத்து செலவுக்குக் கூட காசில்லாமல், நிர்வாகம் ஒதுக்கிய முகாமிலேயே தங்கியிருக்கிறோம் என்கிறார்கள் பல தொழிலாளிகள்.

தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், தொழிலாளர்களின் பாஸ்போர்ட், கம்பெனி நிர்வாகத்திடம் தான் உள்ளது. ஒருவேளை, தாங்களே இந்தியாவுக்குத் திரும்ப நினைத்தாலும் முடியாது. விசா முடிந்துவிட்டதால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். ஒருவேளை ஒரு தொழிலாளர் இந்தியா திரும்ப வேண்டும் என்றால் ரூ.75 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அந்த தொகைக்கு நாங்கள் எங்கே செல்வோம்?

ஒரு வேளை சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருப்பதாக நாங்கள் கைது செய்யப்பட்டால் அவ்வளவுதான். எங்கள் வாழ்நாள் முழுவதும் குவைத்துக்கு எந்த வேலை காரணமாகவும் திரும்பி வரவே முடியாது என்கிறார்கள் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com