நான் மட்டும் ஹீரோ அல்ல- மும்பை தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து 8 பேரை மீட்ட காவலர்

என்னுடன் ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர், சிலர் 50க்கும் மேற்பட்டோரை மீட்டனர். நான் மட்டும் ஹீரோ அல்ல என்று, மும்பை தீ விபத்தில் 8 பேரை காப்பாற்றிய காவலர் கூறியுள்ளார்.
நான் மட்டும் ஹீரோ அல்ல- மும்பை தீ விபத்தில் உயிரை பணயம் வைத்து 8 பேரை மீட்ட காவலர்


மும்பை: என்னுடன் ஏராளமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர், சிலர் 50க்கும் மேற்பட்டோரை மீட்டனர். நான் மட்டும் ஹீரோ அல்ல என்று, மும்பை தீ விபத்தில் 8 பேரை காப்பாற்றிய காவலர் கூறியுள்ளார்.

மும்பையில் கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் கடந்த வாரம்  நள்ளிரவில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மும்பையில் லோயர் பரேல் பகுதியில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் 'டிரேட் ஹவுஸ்' என்ற வணிக வளாகக் கட்டடத்தின் மேல்தளத்தில் இந்த தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்தில் சிக்கிய சுமார் 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 8 பேரை, தன் உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர் சுதர்ஷன் சிவாஜி ஷிண்டேவின் புகைப்படம் சமூகத் தளங்களில் வேகமாகப் பரவியது. உண்மையான நாயகன் என்ற தலைப்பில் அவரது புகைப்படங்கள் நேற்று ஊடகங்களிலும் வெளியானது.

எரிந்து கொண்டிருந்த கட்டடத்துக்குள் தனது உயிரை பணயம் வைத்து, தன்னந்தனியாக பலரை தன் தோளில் தூக்கி வந்து காப்பாற்றிய காவலர் என்று பாராட்டுகளும் குவிந்தன.

இந்த நிலையில், தீ விபத்து குறித்து பேசிய சுதர்ஷன் ஷிண்டே, தீ விபத்து நேர்ந்த கட்டடத்தின் கழிவறைக்கு அருகே பல பெண்கள் மயங்கமடைந்த நிலையில் காணப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவராக வெளியே தூக்கி வந்து காப்பாற்றினேன். 

ஒரு பெண்ணை தூக்கி வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஊடகங்களில் வெளியானதைப் பார்த்தேன். இதர புகைப்படங்களில், ஸ்ட்ரெட்சரில் பலரும் வெளியே கொண்டு வரப்படுவது போன்ற புகைப்படங்களும் இருந்தன. 

என்னை பாராட்டியதற்கு நன்றி. ஆனால், இந்த தீ விபத்தில் நான் காப்பாற்றியது வெறும் 8 பேர்தான், ஆனால் 14 பேர் உயிரிழந்துவிட்டனர். இது கவலை அளிக்கிறது. என்னைப் போல பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நான் மட்டும் ஹீரோ அல்ல என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டடங்களில் இருந்த மகேஷ், சூரஜ் கிரி போன்றவர்களும் துணிச்சலாக செயல்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றினார்கள். எனவே தன்னை மட்டும் குறிப்பிட்டு பாராட்டுவது சரியானது அல்ல என்றும் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com